
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெய்ஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பைப் பார்வையிட, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தலைவர்கள் குழுவாக நடந்து சென்றனர்.
இந்த நிகழ்வை சீன அரசுத் தொலைக்காட்சி சிசிடிவி நேரடியாக ஒளிபரப்பியது. அப்போது தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
ரஷ்ய அதிபர் புதின், “உயிர் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்று அறுவைச் சிகிச்சை செய்யலாம். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாகி, அழியாத தன்மையைக் கூட அடைய முடியும்,” என்றார்.
அதற்கு பதிலளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், “இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழலாம் என்று சிலர் கணிக்கின்றனர்,” என்று கூறினார்.
இவர்களின் உரையாடலைக் கேட்டு வந்த கிம் ஜாங் உன் சிரித்த முகத்துடன் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த உரையாடல் அவருக்கு மொழிபெயர்க்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “நவீன சுகாதார மேம்பாட்டு வழிகள், மருத்துவ முறைகள், மற்றும் உறுப்புப் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை, மனிதன் இன்று வாழ்வதிலிருந்து வித்தியாசமாக, சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன,” என்றார்.
இரு நாட்டு தலைவர்களும் பேசிக்கொண்ட செய்தியை இதுவே உறுதிப்படுத்தியது.