
சென்னை: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றால் தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்குஅளிக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பாக, இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டு போரில் இருந்து தப்பித்து, நமது நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களிடம், செல்லு படியாகும் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லை என்றால், நமது நாட்டு சட்டப்படி, அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையில் இருந்து, கருணை அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.