
Doctor Vikatan: வயிறு மற்றும் குடலைச் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் வழிகள் பற்றி நிறைய வீடியோக்கள், ரீல்ஸ் பார்க்கிறோம். அவை எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை. அந்தக் காலத்து வைத்தியமான விளக்கெண்ணெய் குடிப்பதன் மூலம் வயிறும் குடலும் டீடாக்ஸ் செய்யப்படுமா… வேறு வழிகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், மூலிகைமணி அபிராமி.
சோஷியல் மீடியாவில் நீங்கள் பார்க்கும் ரீல்ஸை வைத்து கண்ட விஷயங்களையும் பின்பற்றி, வயிற்றையும் குடலையும் சுத்தப்படுத்த நினைக்காதீர்கள்.
அது மிகவும் ஆபத்தானது. இயற்கையான முறையில் வயிற்றை சுத்தம் செய்ய எளிய வழிகள் உள்ளன.
வில்வப்பழம் அல்லது விளாம்பழம் என கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் பாரம்பர்ய பழங்களான இவை இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும்.
வயிற்றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை இரண்டும். விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷங்களுக்கு விளாம்பழம் வாங்கி, பூஜை செய்துவிட்டு, அப்படியே குப்பையில் வீசுவோர் பலர்.
பலருக்கும் அதன் அருமை தெரிவதில்லை. விளாம்பழத்தின் உள்ளே உள்ள சதைப்பற்றான பகுதியைச் சுரண்டி எடுத்து, அதை வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது சதைப்பற்றான பகுதியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.

விளாம்பழத்தின் சதைப்பகுதியை வதக்கி, துவையலாகவும் செய்து சாப்பிடலாம். குடலில் உள்ள கிருமிகளை, நச்சுகளை மட்டும் சுத்தம் செய்யாமல், ரத்தத்தில் உள்ள நச்சுகளையும் விளாம்பழம் சுத்தப்படுத்தும்.
விளாம்பழம் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையில் இருக்கும். வில்வப்பழம் லேசான துவர்ப்புச்சுவையில் இருக்கும்.
சித்த மருத்துவத்தில், எந்த நோய்க்கு சிகிச்சை கொடுக்கும் முன்பும் பேதி மருந்து கொடுப்பது வழக்கம். பேதி மருந்து கொடுத்த பிறகு சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் சிகிச்சை சீக்கிரமே பலன் தருவதாக அமையும்.
அந்தக் காலத்தில் வீடுகளில் தாத்தா-பாட்டி, குழந்தைகளை விரட்டி, விரட்டி விளக்கெண்ணெய் கொடுப்பார்கள். விளக்கெண்ணெய் கொடுத்தால் இரண்டு- மூன்று முறை பேதியாகும். அதற்கு ‘லகு பேதி’ என்று பெயர்.
ஆறு மாதங்களுக்கொரு முறை இதைப் பின்பற்றலாம். சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. விளக்கெண்ணெய் தவிர்த்த வேறு சில பேதி மருந்துகளும் சித்த மருத்துவத்தில் உள்ளன.

கடைகளில் விற்கப்படுகிற சாதாரண விளக்கெண்ணையைப் பயன்படுத்த வேண்டாம். மெடிக்கேட்டடு கேஸ்டர் ஆயில் என மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
சித்த மருத்துவர்களிடம், ‘காய்ச்சி ஊற்றிய விளக்கெண்ணெய்’ என்ற பெயரில் சுத்தமான எண்ணெய் கிடைக்கும். நச்சுத்தன்மை துளியும் இருக்காது. இதில் 5 மில்லி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து மாலையில் எடுத்துக்கொண்டு தூங்கலாம்.
மறுநாள் 2-3 முறை மலம் வெளியேறி, குடல் முழுமையாகச் சுத்தமாகிவிடும். குடல் ஆரோக்கியமாக இருந்தாலே செரிமானம் சீராக இருக்கும். நோய்கள் வராது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.