
திருச்சி: தவெக தலைவர் விஜய் வரும் 13-ம் தேதி திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், ஓரிரு நாளில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதே தீவிர பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும், ‘மக்கள் உரிமை மீட்பு நடை பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணியும், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.