
காளான் வளர்ப்பில் அதிகமானோர் சாதித்து வருகின்றனர். காளான் வளர்ப்பைத் தொடங்கிவிட்டு, அதனை எப்படி விற்பனை செய்வது என்று தெரியாமல் தொழிலை பாதியிலேயே கைவிட்டவர்களும் உள்ளனர்.
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள மன்சார் பகுதியில், சந்தோஷ் பன்கர் என்பவர் சிப்பிக்காளான் வளர்ப்பில் வெற்றிகரமாக சாதித்து வருகிறார்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து, பல பிரபல ஹோட்டல்களில் சமையலராக பணியாற்றிய அனுபவம் கொண்ட சந்தோஷ், துபாயிலும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஷெஃப் வேலை செய்தார்.
பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பி, உணவக கேபே ஒன்றைத் தொடங்கினார். அதே சமயம், யூடியூப் மூலம் சிப்பிக்காளான் வளர்ப்பை கற்றுக்கொண்டார்.
புனேயில் சிப்பிக்காளான் வளர்ப்பில் சாதனை!
சந்தோஷ் கூறுகையில்:
“இந்தியாவில் 74% பட்டன் காளான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், சிப்பிக்காளான் வளர்ப்பு எளிதானதும் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடியதுமாகும். பட்டன் காளான் அறுவடைக்கு 8–10 வாரங்கள் பிடிக்கும் நிலையில், சிப்பிக்காளான் வெறும் 22–23 நாட்களில் அறுவடைக்கு வருகிறது. வெளிநாடுகளிலும் சொகுசுக் கப்பல்களிலும் சிப்பிக்காளானுக்கு அதிக வரவேற்பு உள்ளது.” என்றார்.
தனது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, சந்தோஷ் இன்று ஊரிலேயே சிப்பிக்காளான் வளர்ப்பில் முன்னுதாரணமாக திகழ்கிறார். மேலும் அவர் கூறுகையில்,
“சிப்பிக் காளான் வளர்ப்பவர்கள் பலர், அதனை விற்பனை செய்ய முடியாமல் தொழிலை கைவிட்டு விடுகின்றனர்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 1000 சதுர அடியில் ஆர்கானிக் முறையில் சிப்பிக்காளான் வளர்க்க ஆரம்பித்தேன்.

புனே வேளாண் கல்லூரியில் இருந்து அதற்கு தேவையான 30 கிலோ விதையை, கிலோ ஒன்றுக்கு ரூ.90க்கு வாங்கினேன்.
காளான் பேக்குகளில் இருந்து 15 முதல் 17 நாள்களில் மொட்டு வர ஆரம்பிக்கிறது. அதன் பிறகு வேகமாக வளர்கிறது. முதல் அறுவடை 23 முதல் 24 நாட்களில் தொடங்குகிறது.
அடுத்த 8 நாளில் இரண்டாவது அறுவடை தொடங்குகிறது. இறுதி அறுவடை அடுத்த 15 நாட்களில் நடைபெறும்.
சரியாக பராமரித்தால், ஒரு பேக்கில் ஒரு கிலோ காளான் அறுவடை செய்ய முடியும். நான் எனது முதல் முயற்சியில் தினமும் 25 கிலோ காளான் அறுவடை செய்தேன்.
அதனை மொத்த வியாபாரிகளிடம் கிலோ ஒன்றுக்கு ரூ.170க்கு விற்பனை செய்கிறேன். சில்லறையாக விற்றால் கிலோ ஒன்றுக்கு ரூ.250க்கு விற்பனை செய்கிறேன்.
இப்போது ஒவ்வொரு மாதமும் 900 முதல் 1000 கிலோ காளான் அறுவடை செய்கிறேன். இதன் மூலம் ரூ.1.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. சிப்பிக்காளானுக்கு குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை தேவை. எனவே அதற்கு தகுந்த சூழலை உருவாக்கி இருக்கிறேன்.
கோடைக்காலத்திலும் காளான் கிடைக்கும் வகையில், காளான் ஷெட்டில் குறைந்த செலவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறேன். 1000 சதுர அடியில் 1200 பேக்குகளை தொங்கவிட்டு காளான் வளர்க்கிறேன்.
பேக்கின் மீது சொட்டு நீர் அமைத்து இருக்கிறேன். இதனால் பேக் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் பனிப்பொழிவு போன்ற தண்ணீர் புகையை அடித்து ஈரப்பதத்தை பராமரிக்கிறேன்.

காளான்கள் விற்பனையாகாமல் மிஞ்சிவிட்டால், அதனை உலர்த்தி விற்பனை செய்து விடுகிறேன்.
இதனை முழுக்க முழுக்க இயற்கை முறையில்தான் செய்கிறேன். எந்த வித ரசாயனத்தையும் பயன்படுத்துவதில்லை. தண்ணீரை 70 டிகிரி அளவுக்கு சூடாக்கி, அதில் வைக்கோலை மூழ்கடித்து எடுத்து, தண்ணீரை உலர வைத்து பயன்படுத்துகிறேன்.
அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் 1000 சதுர அடியில் காளான் வளர்ப்பை விரிவுபடுத்த இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.