
கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி, விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் வெப்பத்தினால் பலர் பாதிக்கப்பட்டனர், உயிரிழப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாநாடு நடந்த அன்று, கொடும் வெப்பம் எப்படித் தாக்கியது என்பதை ஆராய்ந்துள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. இதுகுறித்து, “தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கொடும் வெப்பத்தின் தாக்கம் குறித்த ஆய்வு!
UTCI அடிப்படையில் வானிடையைக் கணிக்க பூவுைகின் நண்பர்கள் கோரிக்கை!” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பூவுலகின் நண்பர்கள் அறிக்கை:
தமிழக வெற்றிக் கழகம் 21.08.2025 அன்று மதுரையில் ஒருங்கிணைத்த மாநாட்டில் நிலவிய வெப்பத்தினால் பல நூறு பேர் மயக்கமுற்றதாகவும், இரண்டு நபர்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின. சம்பவ இடத்தில் ஆயிரக்கணக்கானோர் தளர்வுற்றதையும் தொலைக்காட்சி நேரலைகளில் காண முடிந்தது. இதைத் தனிப்பட்ட ஒரு நிகழ்வு எனக் கடந்து போகமுடியாது.
2024ல் தமிழக வெற்றிக் கழகத்தின் விக்கிரவாண்டி மாநாட்டிலும் (27/10/2024) இதே நிலைதான் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர், அதில் பலர் வெப்பத்தினால் மயக்கமுற்றனர், சோர்வடைந்து அவதிக்குள்ளாகினர். கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்வில் (6/10/2024) இதே போல் வெப்பத்தினால் நூற்றுக்கணக்கானோர் மயக்கமுற்றனர். குறைந்தபட்சம் ஐந்து நபர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இது போன்ற வெப்பம் சார்ந்த நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

2024 ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியில் ஈடுபட்ட 34 அரசு ஊழியர்கள் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். மேலும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதியில் ஹஜ் வழிபாட்டு யாத்திரையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேலான நபர்கள் சில மணி நேரத்திற்குள்ளாக கடும் வெயிலினால் இறந்தனர். உலகெங்கிலும் அதிகரித்து வரும் வெப்பநிலை (Rising global temperatures) காரணமாக உண்டாகும் கொடும் வெப்பத்தன்மையே (extreme heat stress) மேற்கூறிய மரணங்களுக்குக் காரணம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஐக்கிய நாடுகளின் சபையின் கீழ் இயங்கும் காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அமைப்பான ஐ.பி.சி.சி (IPCC) தனது ஆய்வறிக்கைகளில் புவி வெப்பமயமாதல் காரணமாகத் தென்கிழக்கு ஆசியாவில் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் அது மேலும் உயரக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
அதனாலேயே, இந்தியாவில் வெப்ப அலைகள் (heat waves) பெருமளவில் நம்மைத் தாக்கி வருகின்றன. இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்பநிலைகள் குறித்தான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கிவருகிறது.
வெப்ப அலை என்பது நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கு, ஒரு 6.4 டிகிரி பகுதியின் சராசரி தட்பவெப்ப நிலையை விட சுமார் 4.5 செல்சியஸ் அளவிற்கு அதிகரிப்பதைக் குறிக்கும். ஆனால், மதுரையிலோ, விக்கிரவாண்டியிலோ, சென்னை விமானச் சாகச நிகழ்வின் போதோ வெப்ப அலை நிலவியதாக எந்த அறிவிப்பையும் இந்திய வானிலை மையம் வெளியிடவில்லை. எனினும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே இதனை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.
சில மணி நேரத்திற்கு மட்டுமே நிலவும் கொடும் வெப்பத்தன்மை (extreme heat stress) கூட உயிரைப் பறிக்கக்கூடும். புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட் (Lancet) வெளியிட்ட ‘2024 கவுண்ட்டௌன்’ (countdown) என்ற ஆய்வறிக்கையில் ஆசியாவில் பல இடங்களில் உயிரைப் பறிக்கக் கூடிய கொடும் வெப்பத்தன்மை (uncompensable heat stress) நிலவி வருகிறது என்றும், எதிர்காலத்தில் இந்த நிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. அதைப்போலவே இந்தியாவில் பல மாநிலங்களில் கொடும் வெப்பத்தன்மை உருவாகி வருகிறது. தமிழ்நாடும் அண்மைக் காலங்களில் இப்பாதிப்பைப் பெருமளவில் சந்தித்து வருகிறது.
மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.4 – 37.2 டிகிரி செல்சியஸ் இருக்கும்போது மட்டுமே ஆரோக்கியமாகச் செயல்பட முடியும். இச்சமநிலையை ஏகநிலைமை (homeostasis) எனக் குறிப்பிடுவர். இச்சமநிலை குலைந்து மனித உடலின் அக வெப்பநிலை மிகவும் அதிகரித்தாலோ குறைந்தாலோ மயக்கம், மரணம் போன்ற விளைவுகள் நிகழக்கூடும். இதன் காரணமாகவே பரிணாம வளர்ச்சியில் மனித இனம் புறச் சூழலில் நிகழும் தட்பவெப்ப நிலையின் மாற்றத்திற்கு ஏற்ப உடலைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மையைப் பெற்றது.
குறிப்பாக தோல், மூளை, நரம்பு மண்டலம் போன்ற உறுப்புகள் மனித உடலில் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ளும் வேலையைச் செய்கின்றன. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது மனித உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் சூட்டைத் தோல் மூலமாக வெளியேற்றுகின்றன. அதன் பின்பு, வியர்வைச் சுரப்பிகள் மூலமாக வியர்வை நீரை வெளியேற்றி உடல் குளிர்விக்கப்படும். இச்செயல்பாடு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை அளவிற்குள்ளாகவே செயல்படும். புவி வெப்பமயமாகி வருவதன் காரணமாக உள்ளூர் அளவில் உயர்ந்து வரும் வெப்பநிலை நம் உடலின் குளிர்விக்கும் செயல்பாட்டை உருக்குலைத்துள்ளது.
கொடும் வெப்பத்தன்மையை (extreme heat stress) அதிக நேரம் எதிர்கொள்வதற்கான திறன் மனித உடலுக்கு இல்லை. இதனால் உலகம் முழுவதும் வெப்பத்தினால் நேரடியாகப் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை ஐரோப்பாவின் அனுபவத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
2003ஆம் ஆண்டு ஐரோப்பாவில் வெப்ப அலையின் காரணமாக நிகழ்ந்த 70,000 மரணங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் ‘உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடு’ (Universal Thermal Climate Index) எனும் முன்னெச்சரிக்கை ஆய்வு முறையை உருவாக்கியது.
இந்த ஆய்வு முறையில் ஒரு நிலப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை (temperature), காற்றின் ஈரப்பதம் (humidity), சுற்றுப்புற வெப்பக்கதிர் (mean radiant temperature), காற்றின் வேகம் (wind speed) போன்றவற்றோடு மேலும் சில காரணிகளின் அடிப்படையில் இக்குறியீடு கணக்கிடப்படுகிறது. உடல் மீது எத்தகைய பாதிப்பு, எத்தகைய வெப்ப அளவில் நிகழக்கூடும், அவற்றுக்கு எவை காரணமாக இருக்கின்றன என்பதை மேற்கூறிய குறியீடு விளக்குகிறது. உயிர் கொல்லக்கூடிய அளவிலான கொடும் வெப்பத்தன்மையைத் துல்லியமாகக் கணிப்பதற்கு இந்த அளவுகோல் உதவும் மேலும், கொடும் வெப்பநிலையின் உடல் மீதான பாதிப்புகளைப் பிரத்தியேகமான அளவுகோலைக் கொண்டு விளக்குகின்றது இக்குறியீடு.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலையைக் கணக்கிடுவதற்கான அளவுகோலாக 48 மணி நேரத்தை நிர்ணயித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் அல்லது சில மணி நேரத்திற்குள்ளாக நிலவும் கொடும் வெப்பத்தன்மையை (extreme heat stress) கணக்கிடும் எந்த அளவுகோலையும் இந்திய வானிலை மையம் தற்போது வரை உருவாக்கவில்லை. மேலும், வெப்ப அதிகரிப்பிற்கான அளவீடாக அதிகபட்சத் தட்பவெப்ப நிலையை (Maximum Temperature) மட்டுமே எடுத்துக் கொள்கிறது.
தரைமட்டத் தட்பவெப்ப நிலையையோ (Land surface temperature), காற்றின் ஈரப்பதத்தின் தன்மையையோ (humidity) அளவீடாகக் கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கியுள்ள உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடு பழைய ஆய்வு முறைகளை மாற்றியமைத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய வெப்ப நிலைக்குறியீட்டை (Universal Thermal Climate Index) பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக முன்னெச்சரிக்கை குறித்தான ஆய்வுகளில் இதனைப் பின்பற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதிக அளவில் நகரவாசிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிற்கு இந்த ஆய்வு முறையின் தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது.
அதிகரித்துவரும் நகரக் கட்டுமானங்கள், குறைந்து வரும் பசுமைப்பரப்புகள், அழிந்து வரும் நீர்நிலைகள் போன்றவை, நகர வெப்பத்தேக்கம் (urban heat island) போன்ற விளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதனோடு கொடும் வெப்பமும் இணைந்து உயிரைப் பறிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. மேற்கூறிய மரணங்களில் இத்தகைய புறச்சூழல் மாற்றங்களுக்கும் ஒரு பெரும் பங்குண்டு.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ச்சியாக இத்தகையைப் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றது. அவ்வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டின்போது அப்பகுதியில் நிலவிய உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடு (UTCI) ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் காலை 10.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையில் யூ.டி.சி.ஐ அபாயகரமான அளவான 38°Cஐ விட அதிகமாக இருந்தது தெரியவந்தது. இவ்வெப்பத்தன்மை மயக்கம் முதல் மரணம் வரையிலான நிலையைச் சில மணி நேரங்களிலேயே ஏற்படுத்தக்கூடியது.
மேலும், அன்றைய நாள் மதியம் 12.30 முதல் 4.30 மணி வரையிலான காலகட்டத்தில் யூ.டி.சி.ஐ அளவு 43°Cஐ விட அதிகமாக இருந்தது. இந்த அளவானது ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மயக்கமுறச் செய்யக்கூடிய நிலையாகும். 3.30 மணியளவில் வெப்பநிலை அதிகபட்சமாக 45°Cஐ எட்டியது. இது அரைமணி நேரத்திற்குள்ளாக மாரடைப்பை உண்டாக்கக் கூடிய கொடிய வெப்பநிலையை (46°C) நெருங்கிவிட்ட நிலையாகும்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை மையம் உலக அளவில் வானிலை அளவுருக்களை வெளியிடுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தின் யூ.டி.சி.ஐ அளவீடுகளை ஒரு வாரகால தாமதத்தின் பிறகு கோப்பர்நிக்கஸ் தரவுத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இரண்டாம் த.வெ.க மாநாடு நடந்த மதுரை மாவட்டத்தின் யூ.டி.சி.ஐ அளவுகள் அதிலிருந்து பெறப்பட்டன. (காணவும் – பின்னிணைப்பு -இரண்டாம் படம் ). அவை எங்களுடைய கணக்கீடுகளுடன் பெருமளவில் ஒத்துப்போனது. அதாவது, அன்று மதுரையில் நிலவிய கொடும் வெப்பத்தன்மை உறுதி செய்யப்பட்டது.
மாநாட்டில் இரு உயிர்கள் பறிபோனதற்கும், நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்ததற்க்கும் இப்படிப்பட்ட கொடும் வெப்பநிலை நிலவியதே காரணம் என்று இந்த ஆய்வின் மூலம் புரிந்து கொள்ளலாம் (பார்க்க – இணைப்பு). மேலும் அங்கிருந்தவர்கள் பலர் வெப்பத்தின் காரணமாக சோர்வு (fatigue), தலைச்சுற்றல் (dizziness), குமட்டல் (nausea) போன்ற பல உபாதைகளால் பல நாட்கள் வரை அவதிப்பட்டு இருக்கக்கூடும். இக்கொடும் வெப்பத்தின் தாக்கம் பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அதிகமாகப் பாதித்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
-
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், கொடும் வெப்பத்தன்மையை ஓர் பேரிடராக அறிவிக்க வேண்டும்.
-
கொடும் வெப்பத்தை அளவிடுவதற்கான ஆய்வுகளை இந்திய வானிலை மையம் மற்றும் பிற ஆராய்ச்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
-
கொடும் வெப்பம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை இந்திய வானிலை மையம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-
கொடும் வெப்பத்தன்மையைக் கணிப்பதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடு (Universal Thermal Climate Index) முறையை இந்திய வானிலை மையம் செயல்படுத்த வேண்டும்.
-
அதிகப்படியான மக்கள் கூடும் நிகழ்வுகளை வெப்பநிலை சார்ந்து ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகள், ஆய்வு முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
-
கொடும் வெப்பத்தின் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளாகும் மக்களைக் கண்டறிந்து அவர்களைப் பாதுகாக்க உரிய கொள்கைத் திட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.