• September 4, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

சென்னை என்ற மெட்ராஸ் நகரத்திற்கான அடித்தளம் போடப்பட்டது 1639ஆம் வருடம். 386 வருடங்கள் கடந்தும் பொலிவுடன் திகழ்கிறது எங்கள் நகரம். மெட்ராஸில் பிறந்து, படித்து, வேலையிலமர்ந்து இன்று சென்னையில் வசிக்கும், 75 வயதைக் கடந்த இளைஞனின் சென்னை பற்றிய மலரும் நினைவுகள்.

கிட்டத்தட்ட, 1975 வரை, இந்தியாவில் முக்கிய நகரங்களாகக் கருதப்பட்டவை நான்கு நகரங்கள் – டெல்லி, பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ். இதனால், விந்திய மலையைத் தாண்டி இருப்பவர்களுக்கு தென் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வந்தாலும், அவர்கள் எல்லோருமே மெட்ராஸிஸ்.

உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், சென்னை திரும்பி, சொந்த ஊர் மண்ணை மிதிப்பதில் உள்ள ஆனந்தம் அலாதியானது. பள்ளியில் படிக்கும் போது, ஒருமுறை மீனம்பாக்கம் விமானநிலையம் சென்றிருந்தேன். அன்று, பாரதப்பிரதமர் நேரு அவர்கள் வந்திருந்தார். விமானம் நின்றவுடன், வெகு வேகமாக விமானம் இறங்கும் படிகளில் ஓடி வந்த அவர் துடிப்பு என்னை வியக்க வைத்தது. அவர் பின்னால் மெல்லமாக நடந்து வந்தார் இந்திரா காந்தி.

சிறிய விமான நிலையம், ஆகவே அவர்களை அருகில் சென்று காண முடிந்தது.  ஒரு காலத்தில் உள் நாட்டு விமான நிலையமாக இருந்த சென்னை விமான நிலையம், இன்று பன்னாட்டு விமான நிலையம், பல நாட்டு விமானங்கள் தரையிறங்கும் வசதியுடன்.

நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் சாதி, மதம், மொழி வேறுபாட்டைக் கண்டதில்லை. அமாவாசை நாட்களில் பள்ளி, பதினொறு மணிக்குத் தொடங்கும். வெள்ளிக்கிழமைகளில், இஸ்லாமிய மாணவர்கள் தொழுகைக்குச் செல்ல அனுமதி அளிப்பார்கள். எங்கள் பள்ளிக் கூடத்தைச் சுற்றிப் பல கோயில்கள். பெரும்பான்மையான கடைகளை நடத்திக் கொண்டிருந்தவர்கள் முஸ்லீம் சமுதாயத்தினர். வட இந்தியர்களின் ஜவுளிக் கடைகளும், அடகுக் கடைகளும் இருந்தன. ஆனால், ஒரு போதும் மதம் மற்றும் மொழி சார்ந்த சச்சரவுகள் ஏற்பட்டதில்லை. வந்தவர்கள் எல்லாரையும் வாழ வைக்கும் நகரம் எங்கள் மெட்ராஸ்.

சென்னையில் எத்தனை புராதனக் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள். அவரவர் நம்பிக்கையின் படி இறை வழிபாடு செய்வதை எவரும் தடுப்பதில்லை. அரசாங்க ஆஸ்பத்திரிகளான ஸ்டேன்லி மெடிகல்ஸ், ஜெனரல் ஹாஸ்பிடல் சென்னையின் முக்கியமான அங்கங்களாக இருந்தன என்று கூறலாம். தனியார் மருத்துவமனைகளை விட இவற்றின் மீது மக்களின் நம்பிக்கை அதிகமாக இருந்தது.

பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வதற்கு சுமார் 12 வருடங்கள் மின்சார ரயிலில் பயணித்திருக்கிறேன். இந்த மின்சார ரயில் பயணம் நிறைய புத்தகங்கள் படிக்க எனக்கு நேரத்தை அளித்தது. மின்சார ரயில் தடத்தில் மூன்று நிலையங்கள், கடற்கரை சந்திப்பு, எழும்பூர், மாம்பலம் ஆகியவற்றிலிருந்த  உணவு சிற்றுண்டிச் சாலைகள் தரத்திற்குப் பேர் போனவை. கடற்கரை சந்திப்பு நிலையத்தின் முதல் நடை மேடையிலிருந்த “ஐஸ்க்ரீம்” பார்லர், பயணிகள் அதிகமாக வருகை தரும் கடை.

கடற்கரை சந்திப்பு நிலயத்தின் வாசலில் இருந்த பேப்பர் கடையில் எல்லா தினசரி, வார, மாத இதழ்கள் கிடைக்கும். கடை வாசலில் சற்று நேரம் நின்று, வார மாத இதழ்களைப் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம், படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு. எண்ணிடலங்கா வார, மாத இதழ்கள் வெளி வந்து கொண்டிருந்தன – கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், கல்கண்டு, துக்ளக், கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, பேசும்படம், பொம்மை, அம்புலிமாமா, கண்ணன்……

இந்த காலத்துச் சிறார்கள் தமிழ் சித்திரக்கதைகள் படிக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்று தோன்றுகிறது. கல்கியில் வெளிவந்த வாண்டுமாமாவின் வீரவிஜயன், பர்மாரமணி, விகடனின் துப்பறியும் சாம்பு, போலீஸ் புலி ஆகியவை அற்புதமான சிறுவர் கதைகள். அந்த காலகட்டத்தில் வந்த சினிமா விமரிசனங்களில் தனித்துவம் இருந்தது.

கணக்கற்ற நாடகசபாக்கள், கலையரங்குகள். தினமும் எங்காவது ஒரு கலையரங்கில் நடனநிகழ்ச்சி, நாடகம் அல்லது கச்சேரி நடந்து கொண்டிருக்கும். பல கலையரங்குகள் இருந்தாலும் எனக்குப் பிடித்த கலையரங்கம் இராஜா அண்ணாமலை மன்றம்.   கதாகாலட்சேபம் ஏதாவது ஒரு கோயிலில் இருக்கும். அவரவர்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிக்குச் சென்று வரலாம். இப்போது நாடகக் குழுக்கள் குறைவு. பெரும்பாலான காலட்சேபங்கள், நாடகங்கள் தொலைக்காட்சியில்.

சினிமா காட்சியரங்குகளுக்கு பஞ்சமில்லை. பல இடங்களில் அடுத்தடுத்து திரையரங்குகள். ஆங்கிலம் படம் மற்றும் திரையிடப்படும் எல்பின்ஸ்டன், சபையர், மினர்வா, இந்திப் படம் திரையிடப்படும் ஸ்டார், செலெக்ட். இப்போது பெரும்பான்மையான திரையரங்குகள் மூடப்பட்டு அங்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்துள்ளன.

அந்த காலத்தில் சென்னையில் பெரிய கட்டிடம், 14 மாடி எல்.ஐ.சி. மட்டும்தான். சென்னைக்கு வருபவர்கள் வியந்து பார்த்து “எம்மாம் பெரிய லம்பா கட்டிடம்” என்று சொல்ல வைத்த கட்டிடம். இன்று பல அடுக்கு மாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள். புத்தக விரும்பிகளுக்கு மூர் மார்க்கெட் தவிர சைனா பஜார், திருவல்லிக்கேணி, லஸ் கார்னர் என்று பல சாலையோரக் கடைகள்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது, மாணவர்களை எக்ஸ்கர்ஷன் கூட்டிச் செல்வது, இரண்டு இடங்களுக்கு – உயிர் காலேஜ் என்ற மிருகக் காட்சி சாலை, சென்ட்ரல் இரயில் நிலையம் அருகாமையில், செத்த காலேஜ் என்ற ம்யூசியம், எழும்பூரில். மாணவர்கள் இருவராக கை கோர்த்து மூன்று அல்லது நான்கு ஆசிரியர்கள் மேற்பார்வையில் அரசுப் பேருந்தில் செல்வர். 

எண்ணிலடங்கா மாற்றங்கள் சென்னையில். சென்னை நன்கு வளர்ந்து, விரிவடைந்து உள்ளது. ஆனால், வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்று, விருந்தோம்பும் பண்பை சென்னை மறக்கவில்லை.

-கே.என்.சுவாமிநாதன், கனடா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *