• September 4, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

நான் இராஜலஷ்மி. தற்சமயம் 66 வயதாகிறது. நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே சென்னைதான். திருமணம், பிள்ளைகள் படித்தது,  அவர்கள் திருமணம் எல்லாமே சென்னைதான்.

இப்போது, போதும் சென்னை, இளசுகள்,  வேலைக்குச் செல்பவர்களுக்குதான் சென்னை வேண்டும் நாம் ஒதுங்கி வந்து விடலாம் என்று ஓய்வு காலத்தில் ஏற்காடு வந்து செட்டிலாகி பத்து வருடங்கள் ஆகிறது. ஆனாலும் சென்னையின் இனிமையான நினைவுகளை மறக்க முடியுமா?

அப்போது மக்களிடம் ஓர் ஒழுங்கு இருந்தது. பேருந்தில் முண்டி அடித்துக் கொண்டு ஏற மாட்டார்கள்.  கம்பி அடித்து வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அங்கே போக்குவரத்து துறையைச் சேர்ந்த ஒருவர் வரிசையில் நிற்க வைத்து ஏற்றி விடுவார்.

குறைந்தபட்ச கட்டணம் ஏழு பைசா. சதுர ஐந்து பைசா ஒன்றும் சின்ன சதுர ஒரு பைசா இரண்டும் குடுத்து வாங்குவோம். சில நாட்களில் அது கூட இல்லாமல் இராயபுரம் கல்மண்டபத்திலிருந்து தண்டையார்பேட்டை வரை நடந்தே போவேன்.

வழியில் நான் பிறந்த ரெய்னி (Rainy hospital) ஆஸ்பிடல் வழியாக பார்த்துக் கொண்டே ஸ்கூல் பை ஜோல்னா பையின் நீள கைப்பிடியைத் தலையில் மாட்டிக் கொண்டு பராக்குப் பார்த்துக் கொண்டு இரண்டு கிமீ நடந்து செல்வேன்.

இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடந்தசமயத்தில் மெரினாவில் வரிசையாக சிலைகள் வைக்கப்பட்டன. பள்ளியில் இருந்து  ஒரு நாள் சுற்றுலா சிலைகளைப் பார்க்க அழைத்துச் செல்வார்கள்.  இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை நடந்தே அத்தனை சிலைகளையும் பார்த்து பேர்களை எழுதி வர வேண்டும். மறுநாள் என்னென்ன சிலைகள் பார்த்தோம் என்று கட்டுரை எழுத வேண்டும். 

இப்போது மூர் மார்க்கெட் மற்றும் இரயில்வே ரிசர்வேஷன் கட்டிடம் உள்ள பகுதியில் மைலேடிஸ் பார்க் (Mylady’s park) என்ற பூங்கா இருந்தது. அதற்கும் ஒரு நாள் சுற்றுலா பள்ளியில் அழைத்துச் செல்வார்கள்.  வழக்கம் போல என்ன பறவைகள் மரங்கள் பார்த்தோம் என்று மறுநாள் கட்டுரை எழுத வேண்டும். அருமையான பூங்கா நகரத்தின் நடுவில் இருந்தது. இப்போது இல்லை.

சினிமா தியேட்டர் என்று எடுத்துக் கொண்டால் வடசென்னை அகஸ்தியா, மகாராணி,  மகாராஜா,  பாரத். மவுண்ட் ரோடில் வீகம்ஸீ தியேட்டர் (சபையர், ப்ளூடைமண்ட், எமரால்ட் என்ற மூன்று தியேட்டர்கள் ஒரே கட்டிடத்தில் இருக்கும்.

இப்போது தரை மட்டம்)  நீயூ எல்பின்ஸ்டன் (இப்போது இடிக்கப்பட்டு ரஹேஜா காம்ப்ளக்ஸ் உள்ளது) , தேவி பாரடைஸில் (மூன்று தியேட்டர் இருக்கும்) எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸானதைப் பார்க்க முண்டி அடித்துப் போனது (ஜப்பான் எக்ஸ்போ 70. படத்தில் காட்டுவதாக ஊரெங்கும் ஒரே பேச்சு) ,  திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் 70 களில் திறந்த போது கூட்டம் சேர்ப்பதற்காக ஒரு டிக்கட் வாங்கினால் இரண்டு படம் பார்க்கலாம் என்ற சலுகை (9.30 – 12.30 ஒரு படம் 1.00 – 4.00 ஒரு படம்)

70களில் பார்த்த ஹடாரி, பாசமலர் போன்ற படங்கள் இன்றும் பசுமையான நினைவில்..

இப்படி பழைய மலரும் நினைவுகள் ஏராளம்.

திருமணம் முடிந்து கணவர் மற்றும் பிள்ளைகளின் சென்னை கூகுள் மேப் நான்தான். எல்லா இடங்களுக்கும் வழி  சொல்லும் மேப். என்ன ஒரே ஒரு பிரச்சனை, சாலைகளின் பெயரை பழைய  பெயரில் சொல்லுவேன். 

அண்ணா சாலையை மவுண்ட் ரோடு என்றும், இராதா கிருஷ்ணா சாலையை எட்வர்ட் எலியட்ஸ் ரோடு என்றும், டி.டி.கே சாலையை மௌபரீஸ் ரோடு என்றும் சொல்லிச் சொல்லி கஷ்டப்பட்டு மாற்றிக் கொண்டது ஒரு கதை.

இப்போதும் ஏதாவது வேலையாக ஏற்காட்டிலிருந்து சென்னை சென்றால், அந்தப் பழைய சென்னையை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். 

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *