• September 4, 2025
  • NewsEditor
  • 0

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும்.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் என மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கவிருக்கின்றன.

இதுவரை நடைபெற்றிருக்கும் 12 உலகக் கோப்பைத் தொடர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றன.

பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா

இதனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் இம்முறை கண்டிப்பாகத் தங்களின் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் எனத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தும் கேப்டன் ஃபாத்திமா சனா, உலகக் கோப்பையில் பதற்றமில்லாமல் அணியை வழிநடத்த, கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை இன்ஸ்பிரேஷனாக ஏற்றிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் பேசிய ஃபாத்திமா சனா, “உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அணியை வழிநடத்தும்போது ஆரம்பத்தில் பதற்றம் ஏற்படுவது இயல்புதான்.

ஆனால், ஒரு கேப்டனாக தோனிதான் எனக்கு இன்ஸபிரேஷன். இந்தியா மற்றும் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக அவரின் ஆட்டங்களை நான் பார்த்திருக்கிறேன்.

தோனி (Dhoni)
தோனி (Dhoni)

களத்தில் முடிவெடுக்கும் தன்மை, அமைதி, தனது வீரர்களைத் தக்கவைப்பது என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

அவரின் நேர்காணல்களையும் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் கேப்டனாகப் பொறுப்பேற்றதும், தோனியைப் போல ஆக வேண்டும் என்றுதான் நினைத்தேன்” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *