
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையேயான வாக்குவாதத்தில், ரம்யாவின் காலில் முனியப்பன் விழ வைக்கப்பட்டதாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், திண்டிவனம் நகராட்சி ஆணையர் அறையில், அவரது கணவரும் 8-வது வார்டு கவுன்சிலருமான ரவிச்சந்திரன், தி.மு.க பெண் கவுன்சிலர் ரம்யா உள்ளிட்ட 8 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, நகராட்சி ஊழியரான முனியப்பன் அங்கு ஓரமாக நின்று கொண்டிருக்கிறார்.
மிக சரியான 1.30 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், கவுன்சிலர் ரம்யா அமர்ந்த சேரை நகர்த்திவிட்டு அவரது காலில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார் முனியப்பன். அப்போது அந்த அறையில் இருந்தவர்கள், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துதுடன் அந்தக் காட்சி முடிவடைகிறது.
நகராட்சித் தலைவர் அறையில் பதிவான இந்த சிசிடிவி வீடியோ பொது வெளியில் கசிந்த நிலையில், `பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊழியரை கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்த தி.மு.க கவுன்சிலர் ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று 3 தி.மு.க கவுன்சிலர்கள், 2 அ.தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் ஒரு வி.சி.க கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷிடமும், நகராட்சி மேலாலரிடமும் நேற்று முன்தினம் புகாரளித்தனர்.
அதையடுத்து திண்டிவனம் டி.எஸ்.பி அலுவலகத்தில் முனியப்பன் கொடுத்த புகாரில், `நான் பணியில் இருந்தபோது 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யா, 2021-ல் தெருவிளக்குகள் பழுது தொடர்பான கோப்பு ஒன்றை எடுத்து தரும்படி வாக்குவாதம் செய்ததுடன் என்னை ஒருமையில் திட்டினார்.
அதையடுத்து அவருடன் வந்த நான்கு பேரும் என்னை மிரட்டினர். அதேபோல ரம்யாவின் கணவர் ராஜா, `உன்னை தீர்த்துக் கட்டிவிடுவேன்’ என மிரட்டினார். அத்துடன் ரம்யா என்னுடைய சாதிப் பெயரை குறிப்பிட்டு திட்டினார்.
அன்று மாலையே நகராட்சித் தலைவரின் கணவரும், கவுன்சிலருமான ரவிச்சந்திரன் என்னை நகராட்சி ஆணையர் அறைக்கு அழைத்தனர். நான் அங்கு சென்றபோது, அங்கு ரம்யாவும் இருந்தார்.

அப்போது ரம்யாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் கூறினார். அதனால் கட்டாயத்தின் பேரில் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அதனால் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் நகராட்சித் தலைவரின் கணவரும் கவுன்சிலருமான ரவிச்சந்திரன், நகராட்சி அதிகாரிகளான நகராட்சி மேலாளர் நெடுமாறன், வருவாய் அலுவலர் பழனி, நகர அமைப்பு அலுவலர் திலகவதி, துப்புறவு ஆய்வாலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் ஆனந்தன், ரவிச்சந்திரனின் உறவினர் காமராஜ், 14-வது வார்டு கவுன்சிலர் சுதாவின் கணவர் பிர்லா செல்வம் உள்ளிட்ட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.