
‘ஒரே நாடு, ஒரே வரி’ – இது தான் ஜி.எஸ்.டியின் சாராம்சம்.
முன்பு, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, இந்த வரி, அந்த வரி என ஏகப்பட்ட வரிகளைக் கட்ட வேண்டியதாக இருந்தது.
2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி, இந்தியாவில் ‘ஜி.எஸ்.டி’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின், ஒரே வரி தான். அந்த ஒரு வரியில் இருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு வரிகள் பிரிந்து சென்றன.
என்ன பிரச்னை?
ஆனாலும், நான்கு ஸ்லாப்கள் கொண்ட ஜி.எஸ்.டி நடைமுறை உற்பத்தியாளர், விற்பனையாளர், நுகர்வோர் என அனைத்து தரப்பினரையும் பாதித்தது… அத்தனை பேர் தலையிலும் வரிச்சுமை விழுந்ததால் ஆடிப்போய்விட்டனர்.
அடுத்ததாக, ஜி.எஸ்.டி வரியை எப்படி வசூலிப்பது, எவ்வளவு வசூலிப்பது… கொடுப்பது, அதற்கு நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் போன்ற குழப்பங்களும், சிக்கல்களும் ஒருபக்கம் எழுந்தன.
இவற்றிற்கு எல்லாம் ஒருவாறு மக்கள் பழகிவிட்டாலும், ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்து வந்தது.
லேட்டஸ்ட் ஜி.எஸ்.டி மாற்றம் என்ன?
இந்தக் கோரிக்கை எப்படியோ 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தின உரையின் போது, ‘தீபாவளி கிஃப்ட்’ ஆக ஜி.எஸ்.டி குறைப்பு உள்ளது என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையடுத்து நேற்று நடந்த 56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது.
இதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதமாக இருந்த ஜி.எஸ்.டி ஸ்லாப்கள், தற்போது 5 மற்றும் 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மக்களின் முக்கிய தேவைப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

டி.வி, ஏசி போன்ற மின்சாதனப் பொருள்களுக்கு 28-ல் இருந்து 18 சதவிகிதமாக ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக கார்கள், பைக்குகளுக்கும் வரி குறைப்பு நடந்துள்ளது. அதுவும் 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைகிறது.
இந்த வரி விதிப்புகள் வருகிற செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
ஆடம்பர பொருள்கள் மற்றும் ஆரோக்கிய கேடு பொருள்களுக்கு 40 சதவிகித வரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான அமல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, இந்த ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு பொருளாதாரத்திற்கு என்ன பயனை அளிக்கும் என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன்.
“ஜி.எஸ்.டி வரி இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியப் போது எதிர்ப்புகள் பலமாக எழுந்தன.
இந்த வரியைப் பல நாடுகளில் அறிமுகப்படுத்தி சிரமப்பட்டிருக்கிறார்கள். அப்படி அறிமுகப்படுத்தியவர்கள் ஆட்சியை மீண்டும் பிடிக்கவில்லை… ஒரு நாட்டிற்கு ஒரு வரி என்று கூறிவிட்டு, நான்கு ஸ்லாப் வரிகளை விதிக்கிறீர்கள் – இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன.
உண்மை நிலவரப்படி, ஏற்கெனவே நிறைய வரிகள் இருந்த ஒரு இடத்தில், ஒரே ஒரு வரி விதிப்பது சாத்தியமில்லை. அதனால், இப்போது நான்கு ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் இரண்டு ஸ்லாப்களாக குறைக்கப்படும் என்று கூறினார்கள்.
இந்த 8 ஆண்டு காலத்தில், ஜி.எஸ்.டி நடைமுறை இந்தியாவில் நன்றாகவே செயல்பட்டிருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே பயனடைந்திருக்கின்றன.

அதிகரிக்கும்… கைக்கொடுக்கும்!
அதனால், இப்போது செய்யப்பட்டுள்ளது, ‘மறு சீரமைப்பு’ ஆகும். இதில் இரண்டு ஸ்லாப்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், மக்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க உள்ளன.
மத்திய அரசின் கூற்றின் படி, வரிகள் குறைக்கப்படும் போது, மக்கள் பொருள் வாங்கும் அளவின் எண்ணிக்கை கூடும். இதனால், மக்கள் வரி கட்டுவது அதிகரிக்கும்… அரசுக்கு மொத்த வரி வருமானமும் அதிகரிக்கும்.
மக்களின் நுகர்வு அதிகரிக்கும் போது, வியாபாரம் பெருகும்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
அமெரிக்காவின் வரி சில துறைகளைச் சுணக்கமாக்கி இருக்கும் இந்த வேளையில், இந்த வரி குறைப்பு பொருளாதாரத்திற்கு பெரிதும் கைக்கொடுக்கும்.
மாநில அரசுகளுக்கு கூடும் வருமானம்!
இந்த வரிக் குறைப்பையும் கண் துடைப்பிற்காக செய்யாமல், நன்றாகவே செய்திருக்கின்றனர். சில பொருள்களுக்கு அறவே வரியை எடுத்துவிட்டனர்.
12 சதவிகித ஸ்லாப்பை நீக்கியிருப்பதால், சில பொருள்களின் கணிசமாக விலை கூடவும் செய்யலாம்.
முன்பு, 28 சதவிகித வரிக்கு மேல் செல்லும் ஆரோக்கிய கேடுப் பொருள்களுக்கு, செஸ் வரி வசூலிக்கப்படும். அது முழுக்க முழுக்க மத்திய அரசிற்கே செல்லும்.
ஆனால், இப்போது ஆடம்பர மற்றும் ஆரோக்கிய கேடுப் பொருள்களுக்கு 40 சதவிகிதம் என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வரி மத்திய அரசு, மாநில அரசு என இரண்டு அரசுகளுக்குமே பிரிந்து செல்லும். இதனால், இனி மாநில அரசிற்கு வரி வருமானம் கூடும்.

காப்பீட்டிற்கு ‘நோ’ வரி!
தனிநபர் மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டிற்கு முற்றிலும் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்க வேண்டிய விஷயம் ஆகும்.
இதனால், காப்பீடு துறை வளரும்… மக்களும் காப்பீடுகளை அதிகம் எடுப்பார்கள்.
தங்கத்தின் மீதான 3 சதவிகித வரி, செய்கூலி மீதான 5 சதவிகித வரி, எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான 5 சதவிகித வரிகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பரிசு
இதை வரி இழப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என இரண்டு விதமாக பார்க்கலாம்.
கடந்த காலாண்டில், இந்தியாவின் மொத்த உற்பத்தி திறன் 7.8 சதவிகித வளர்ச்சியாக இருந்துள்ளது. இது நல்ல வளர்ச்சி ஆகும்.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரியைக் குறைத்துள்ளது பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்.
தீபாவளி சமயத்தில், வரி குறைப்பு நடந்திருப்பது, தற்காலிகமாக விற்பனையை அதிகரிக்கும்.
வரிக் குறைப்பில் அரசியல் இருக்கிறது போன்ற விமர்சனங்கள் எழுகின்றன. எப்படி பார்த்தாலும், அவ்வப்போது வரும் மாநில தேர்தல்களுக்காக தொடர்ந்து வருவாய் இழப்பதற்கு மத்திய அரசு தயாராக இருக்காது. தவிர, பிற மாநிலங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒரு மாநில தேர்தலுக்காக இந்த வரிக் குறைப்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நான் நினைக்கிறேன்.
எப்படி பார்த்தாலும், எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இது நல்ல தீபாவளி பரிசு”.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…