
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.
அப்போது அங்கே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், செய்தி சேகரிக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது.
இன்று காலை 10 மணியிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் மே தின பூங்காவில் கூட ஆரம்பித்தனர். மதியம் 12 மணியளவில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான பெண்கள் மே தின பூங்காவினுள் கூடியிருந்தனர். வெளியே 50 க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.
12:30 மணி வாக்கில் காவல்துறையினர் கைது நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது அங்கிருந்த சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் மற்றும் இதர காவலர்கள் பூங்காவின் உள்பக்கம் மற்றும் கதவு அருகே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.
சாலையில் கயிறு மூலம் தடுப்பை ஏற்படுத்தி அதற்கு மேல் எந்தப் பத்திரிகையாளரும் வரக்கூடாதெனக் கடுமையாகவும் கூறினார். பூங்காவினுள் காவல்துறையினர் இறங்கி பெண்களைக் கைது செய்கையில் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததால் விஜயகுமாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ‘உங்களை விட்டா நீங்க எங்களோட பணியைச் செய்யத் தடையா இருப்பீங்க. அதான் தடுக்குறோம்’ என்றார். பதிலுக்குப் பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து, ‘இது என்ன சார் புதுசா இருக்கு. எங்களை எங்க வேலையைச் செய்ய விடுங்க’ எனக் கேட்கையில், ‘இதுதான் உத்தரவு. வேணும்னா அப்பீல் போயிக்கோங்க’ எனக் கூறிவிட்டு பெண்களைக் குண்டுக்கட்டாக கைது செய்வதை மேற்பார்வையிடச் சென்றார்.

இணைய ஆணையருக்கு எதிராக சென்னைப் பத்திரிகையாளர் மன்றமும் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.