
தெரு நாய்கள்:
தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக தெரு நாய்கள் தொல்லை, ரேபிஸ் நோய் தாக்குதல் போன்றவை கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் விவாதக்களத்துக்குள் இருக்கிறது.
இந்த நிலையில், வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கடந்த ஜனவரி 30-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு அதன் உரிமையாளர்கள் மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
சிப் கட்டாயம்:
இதற்கிடையில், சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களின் உடலில் சிப் பொருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சிப் எதற்கு?
அந்த சிப் மூலம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா? என்பனவற்றைக் கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும் என சென்னை மாநகராட்சி நம்புகிறது.
நாய்களின் உடலில் மைக்ரோ சிப்கள் தோலுக்கு அடியில், பொதுவாக தோள்பட்டைப் பகுதியில் ஊசி மூலமாகச் செலுத்தப்படும். இந்த சிப் ஒரு அரிசிப் பருக்கையின் அளவில் மட்டுமே இருக்கும்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த மைக்ரோ சிப்பில் நாயின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) வழங்கிய சிப் எண் ஆகிய விவரங்கள் பதிவேற்றப்பட்டு இருக்கும்.
அந்த நாய்கள், எந்தப் பகுதியில் காணப்படுபவை என்ற ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் (புவி குறியீடு) விவரமும், வீட்டு நாய்களில் அவற்றின் உரிமையாளர் விவரங்களும் இருக்கும்.
உடலில் அந்த சிப் இருக்கும் இடத்திற்கு அருகில் ஸ்கேனர் கருவியைக் கொண்டு செல்லும்போது அதிலுள்ள விவரங்களைப் படிக்க முடியும்.
RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சிப்களில் நாயின் விபரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தத் தரவுகள் பிரத்யேக மென்பொருள் செயலியின் மூலம் பராமரிக்கப்படும்.