• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்த காவல்துறை சில நிமிடங்களிலேயே குண்டுக்கட்டாக கைது செய்தது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயத்தை எதிர்த்தும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடியிருந்தனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போராட்டக்குழுவினர் கைது செய்யப்பட்ட விதம் சம்பந்தமான வழக்கும், தனியார்மயத்தை எதிர்த்து போராட்டக்குழுவினர் தொடர்ந்த வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில்தான் இன்று காலையிலிருந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் கூட ஆரம்பித்தனர்.

மதியம் 12 மணியளவில் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பூங்காவில் கூடியிருந்தனர். விஷயம் தெரிந்து மேலும் பல பெண்களும் மே தின பூங்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். காவல்துறை அலர்ட் ஆனது. மே தின பூங்காவின் வாயிற் கதவை இழுத்து மூடினர். அதற்கு மேல் வந்த யாரையும் உள்ளே விட மறுத்தனர். சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். கூடியிருந்தவர்களை கைது செய்ய காவல்துறை வேன்களும் அரசு பேருந்துகளும் கொண்டு வரப்பட்டன.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

12:30 மணிக்கு மேல் அனைவரையும் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர். சில நிமிடங்களிலேயே அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கினர். முதலில் கேட்டுக்கு வெளியே நின்ற பெண்களை குண்டுக்கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதில் சிலர் காயமடையவும் செய்தனர். செய்தி சேகரிப்பதற்காக பூங்காவின் உள்ளும் கேட் அருகேயும் நின்ற பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து காவல்துறையினர் வெளியேற்றினர். பத்திரிகையாளர்கள் யாரும் பூங்காவுக்குள் நுழைய முடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்திவிட்டு பூங்காவுக்குள் இருந்த பெண்களை பலவந்தமாக கைது செய்தனர்.

இதுதொடர்பாக அங்கு கூடியிருந்த பெண்களிடம் பேசுகையில், ‘எங்களை 13 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்து 14 ஆம் தேதி மாலையில் விடுவித்தனர். 1 மாதத்துக்கும் மேலாக நாங்கள் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம். அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என கூடிப் பேசி முடிவெடுக்க நினைத்தோம். அதற்காகத்தான் இந்த பூங்காவில் கூடினோம். எல்லாரும் கலந்தாலோசித்துவிட்டு மதிய உணவை சாப்பிட்டு கலையலாம் என்றுதான் இருந்தோம். அதற்குள் காவல்துறையினர் எங்களை அழைத்து மரியாதைக் குறைவாக பேசினர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

`முட்டாள்த்தனமா எதையாவது செஞ்சிடாதீங்க.. ‘ என்றனர். முதலில் நாங்கள் கூடிப் பேச வேறு இடம் ஏற்பாடு செய்து தருகிறோம் என்றனர். பின்னர், ‘உங்களைப் பார்த்தாலே எங்களுக்கு பயமாக இருக்கிறது. உடனே கலைந்து செல்லுங்கள்.’ என மாற்றி மாற்றிப் பேசினர். அவர்கள் எங்களை அநாகரிகமாக நடத்திய விதம்தான் போராடும் மனநிலைக்கு தள்ளுகிறது. எங்க வாழ்க்கையை இழந்து நிற்குறோம். ஒன்னு எங்களை கைது பண்ணி ஜெயில்ல அடைங்க. இல்லன்னா எங்க வேலையை எங்களுக்கு கொடுங்க. இந்த குரல் முதலமைச்சருக்கு கேட்கவே கேட்காதா…’ என வேதனையுடன் பேசினர்.

காவல்துறை தரப்பில் விசாரிக்கையில், ‘ஒரு மணி நேரம் கூடி பேசிவிட்டு கலைந்துவிடுவோம் எனக் கூறியவர்கள், அப்படியே தொடர்ந்து அமர பார்த்தார்கள். அதனால்தான் நடவடிக்கையில் இறங்கினோம்.’ என்றனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை அருகிலுள்ள சில சமூக நலக்கூடங்களில் பிரித்து பிரித்து அடைத்து வைத்திருக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தூய்மைப் பணியாளர் பிரச்னையை சுமுகமாக தீர்க்காமல் தமிழக அரசு வளரவிட்டுக் கொண்டே செல்கிறது!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *