• September 4, 2025
  • NewsEditor
  • 0

ஐபிஎல்-லில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரரான அமித் மிஸ்ரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

சுழற்பந்துவீச்சாளரான இவர் 2003-ல் வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரில் (50 ஓவர்) தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அதற்கு 5 ஆண்டுகள் கழித்து 2008-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், அடுத்து 2010-ல் ஜிம்பாப்வேவுக்கெதிரான போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

அமித் மிஸ்ரா (Amit Mishra)

மூன்று ஃபார்மெட்டுகளையும் சேர்த்து 68 சர்வதேச போட்டிகள் ஆடியிருக்கும் அமித் மிஸ்ரா, மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் 15 பேர் கொண்ட பட்டியலில் அமித் மிஸ்ராவும் ஒருவர்.

ஐ.பி.எல்லில் 161 போட்டிகளில் 174 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் 8-வது இடத்தில் இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2017-ல் இங்கிலாந்துக்கெதிராகவும், ஐ.பி.எல்லில் கடைசியாக 2024-ல் லக்னோ அணி சார்பில் ராஜஸ்தான் அணிக்கெதிராகவும் ஆடியிருக்கும் அமித் மிஸ்ரா இன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமித் மிஸ்ரா, “25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கிறேன்.

கிரிக்கெட்தான் என் முதல் காதல், என் குரு, என் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஆதாரம்.

இந்தப் பயணமானது பெருமை, கற்றல், கடினம், அன்பின் தருணங்கள் என எண்ணற்ற உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது.

பி.சி.சி.ஐ, ஹரியானா கிரிக்கெட் சங்கம், எனது பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்ஸ், சக வீரர்கள் மற்றும் என்னுடைய ஒவ்வொரு அடியிலும் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் அளித்த ரசிகர்கள் ஆகியோருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஆரம்பக் கால போராட்டங்கள், தியாகங்கள் முதல் மைதானத்தில் மறக்க முடியாத தருணங்கள் வரை, என்னுடைய ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு நபராகவும் என்னை வடிவமைத்த அனுபவமாக இருந்துள்ளது.

ஏற்றத் தாழ்வுகளின்போது என் பக்கம் நின்ற என் குடும்பத்தினருக்கு நன்றி. இந்தப் பயணத்தை சிறப்பானதாக மாற்றிய அணியினருக்கும், வழிகாட்டிகளுக்கும் நன்றி.

என்னுடைய இந்த அத்தியாயத்தை முடிக்கும்போது என் இதயம் முழுவதும் அன்பால் நிறைந்துள்ளது.

கிரிக்கெட் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. இப்போது, என்னை உருவாக்கிய கிரிக்கெட்டுக்கு திருப்பித் தர ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

அமித் மிஸ்ரா என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வரும் போட்டி எதுவென்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *