
சமூகத்திற்கு நன்மை செய்ய உருவாக்கப்பட்ட துறையில், சமீபக்காலமாக மோசடி, ஊழல் புகார்கள் அதிகரித்து வருகிறதாம். அந்தத் துறையில், பணம் அதிகமாகப் புழங்கும் ஒரு திட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ‘ஜெயமான’ அதிகாரி.
துறையின் மேலிடத்தில் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, பொறுப்பைப் பெற்றிருக்கும் ‘ஜெயமானவர்’, இனிப்பு விவகாரத்தில் புகுந்து விளையாடுவதாகத் தகவல். ‘அந்த அதிகாரி ஏற்கெனவே தலைநகரில் பணிபுரிந்தபோது, கலெக்டர் கையெழுத்தையே போலியாகப் போட்டு மோசடியில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் ஆனவர்.
அப்படிப்பட்ட ஒருவரை, பணம் புழங்கும் திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளரான நியமித்தால் எப்படி இருக்கும்… பாலுக்குக் காவலாகப் பூனையை யாராவது வைப்பார்களா..?’ எனக் கொதிக்கிறார்கள் நன்மை செய்யும் துறையின் அதிகாரிகள்!
அண்டை மாநிலத்தை ஒட்டிய மாவட்டத்தில், தனியார் நிறுவனங்களை மிரட்டி அரசியல் பிரமுகர்கள் மாமூல் கேட்பதாக, தொடர்ச்சியாக புகார் எழுந்தன. இந்த நிலையில்தான், தனியார் நிறுவனம் ஒன்றில் மாமூல் கேட்டு மிரட்டியதாக, ஆளும் தரப்பின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த உத்தரவைப் போட்டதே மாவட்டத்தின் உச்ச அதிகாரிதானாம். அவரது நடவடிக்கையைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களில் மாமூல் வசூலிப்பது நின்றுபோயிருக்கிறதாம். அடுத்தப்படியாக, மணல் கான்ட்ரக்டர்களிடம் வசூல் செய்யும் அரசியல் புள்ளிகளுக்கும் செக் வைக்க முடிவெடுத்திருக்கும் உச்ச அதிகாரி, அதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். ஆனால், அரசியல் புள்ளிகளோ அடங்குவதுபோலத் தெரியவில்லை என்பதால், விரைவிலேயே சில அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகிவருகிறாராம் அந்த உச்ச அதிகாரி!
கதர்க் கட்சியின் சீனியர் ‘ராமாயண’ பிரமுகர், தனக்குரிய அங்கீகாரம் கட்சியில் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறாராம். மாநிலத் தலைமையும் டெல்லித் தலைமையும் தன்னைக் கண்டுகொள்ளவே இல்லை என்ற அதிருப்தியில் இருப்பவர், தனிக் கட்சி தொடங்குவதற்கும் ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறாராம்.
அதேவேளையில், தேசிய அளவிலான ‘சைக்கிள்’ கட்சியிலிருந்தும் அழைப்பு வந்துள்ளதால், விரைவிலேயே ஒரு முடிவை எடுப்பார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதற்கிடையே, சமீபத்தில் சமுதாய நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருக்கும் அந்த ‘ராமாயண’ பிரமுகர், ‘கண்ணான’ சீனியர் மாண்புமிகுவை ஓரங்கட்டுவதுபோல நிகழ்ச்சியை நடத்தி முடித்திருப்பதால், கடுகடுப்பில் இருக்கிறதாம் மாண்புமிகுத் தரப்பு. எனவே, ‘ராமாயண’ பிரமுகரை ‘வீக்’ செய்ய காய்களை நகர்த்தி வருகிறதாம் அந்தத் தரப்பு!
சமீபத்தில், தலைநகரிலுள்ள சூரியக் கட்சியின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார் முதன்மையானவர். அதில், அங்காடித் தொகுதி, ஆன்மீகத் தொகுதி, ராயல் தொகுதியின் நிர்வாகிகளைச் சகட்டுமேனிக்கு வசை பாடிவிட்டாராம். அதிலிருந்தே, ‘அந்த மூன்று தொகுதியின் பிரதிநிதிகளுக்கும் மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பு இல்லை’ என்ற பேச்சு வைரலாகி வருகிறது.
குறிப்பாக, ராயல் தொகுதியின் மக்கள் பிரதிநிதியான கனவுப் புள்ளி மீது, அங்குள்ள பகுதி நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொகுதி நிர்வாகிகளை அழைத்து, ‘உங்களுக்கு என்ன வேண்டுமோ, அனைத்தையும் செய்துகொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று ஐஸ் வைத்திருக்கிறாராம் கனவுப் புள்ளி!
‘கூட்டணியில் இணைவதற்கான சாதகமான சூழ்நிலையை, மலர்க் கட்சி தனக்கு உருவாக்கித் தராது’ என்ற முடிவுக்கு வந்த ‘இனிஷியல்’ தலைவர், ‘மலர்க் கட்சியுடான கூட்டணியிலிருந்து விலகுகிறோம்’ என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். அதன் பின்னணியில், இனிஷியல் தலைவருக்கு வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் கணக்குகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அவரிடமிருந்து இப்படி ஒரு பட்டாசு கிளம்பும் என்று எதிர்பார்க்காத மலர்க்கட்சியின் சீனியர்கள் சிலர், ‘என்ன இப்படி பண்ணிட்டீங்க… கொஞ்சம் பொறுங்க… அவசரப்பட்டு காட்டமா ஏதும் பேசிடாதீங்க… டெல்லியிடம் பேசி நல்ல பதிலைs சொல்கிறோம்’ என்று விடாது சமாதானம் பேசிவருகிறார்களாம். மலர்க் கட்சியின் மாநிலத் தலைமையும் ‘இனிஷியல்’ தலைவரும் இன்று இது தொடர்பாகச் சந்திக்கிறார்கள்!