
ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது.
பிற நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை பெரும்பாலும் நிறுத்திவிட்டன. ஆனாலும், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தால், ரஷ்யா உக்ரைன் போரைத் தொடர்ந்து வருகிறது என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டு.
இதனால், சீனாவைத் தவிர்த்து, இந்தியா மற்றும் பிரேசில் மீது ட்ரம்ப் கூடுதல் 25 சதவீத வரியை விதித்துள்ளார்.
பத்திரிகையாளர் கேள்வி
இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் மற்றும் போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கி சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, போலந்து பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம், “புதினின் குறித்த விரக்தியையும், ஏமாற்றத்தையும் நீங்கள் தொடர்ந்து வெளிப்படுத்துகிறீர்கள். பிறகு ஏன் ரஷ்யாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?” என்கிற கேள்வியை முன்வைத்தார்.
ட்ரம்ப் பதில்
அதற்கு ட்ரம்ப் பதிலளித்தார்:
“எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? சீனாவிற்கு அடுத்து, ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஏறத்தாழ சமமாக எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா மீது இரண்டாம் நிலை வரி விதித்தது நடவடிக்கை இல்லை என்று சொல்கிறீர்களா?

இதனால் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அது நடவடிக்கை இல்லை என்று சொல்கிறீர்களா?
நான் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை.
ஆனால், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும்போது, நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேட வேண்டும் என்று நினைக்கிறேன்” என அவர் கூறி பொறிந்து தள்ளியிருக்கிறார்.