
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில், காவல்துறை விசாரணை மந்தமாக நடந்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.
திருப்புவனம் என்றாலே திமுக அரசுக்கு திருகுவலிதான் போல..!
தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய அஜித் குமார் கொலை விவகாரம் ஒருவழியாக தற்போது அடங்கியுள்ள நிலையில், அதே திருப்புவனத்தில் வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசுத்துறை சார்ந்த தீர்க்கப்படாத மக்களின் பிரச்சனைகளை ஒரே இடத்தில் தீர்த்து வைக்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டிலும் பெரிய விழாபோல் அரசு நடத்தி வருகிறது.
இதில் காவல்துறை உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு மக்களிடம் மனுக்களை வாங்குகிறார்கள்.
சில மனுக்களுக்கு உடனடித் தீர்வும், பெரும்பாலான மனுக்களுக்கு அதிகபட்சம் 45 நாள்களில் தீர்வு காணப்படும் என்றும் அரசு தெரிவித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 185 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் திருப்புவனம் தாலுகாவில் பூவந்தி, புதூர், மடப்புரம், பொட்டப்பாளையம், ஏனாதி, நெல்முடிக்கரை, பழையனூர் பகுதிகளில் முகாம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 29 அன்று காலை திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தின் கீழ் ‘உங்களுடன் ஸ்டாலின்’ கோரிக்கை மனுக்கள் மிதப்பதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எழுத்துகள் அழியாத, காகிதம் நைந்து போகாமல் மிதந்த மனுக்களை அப்பகுதி இளைஞர்கள் வெளியில் எடுத்து போட, தாலுகா அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து அந்த மனுக்களை எடுத்துச் சென்றனர்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவி, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசை விமர்சித்து பேச ஆரம்பித்தனர்.

“இவைகள் முடித்து வைக்கப்பட்ட மனுக்கள், மனுக்களின் ஜெராக்ஸ்” என்று முதலில் பதிலளித்த மாவட்ட நிர்வாகம், வீடியோக்கள் வெளியான பின்பு வேறு வழியில்லாமல் ‘விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிக்கை வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, ‘தாலுகா அலுவலகத்துக்குள் புகுந்து மனுக்களை திருடிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதால், இவ்விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க வழக்கறிஞர் மணலூர் மணிமாறன் கூறுகையில்,
“‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் வாங்குகிற மனுக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த முகாமே கண்துடைப்புதான் என்றாலும், அதற்காக மக்களிடம் வாங்குகிற மனுக்களை இந்தளவுக்கு அலட்சியமாக கையாள்வார்கள் என்று நினைக்கவில்லை.
முதலில் இதை மறுத்த மாவட்ட நிர்வாகம், பின்னர் ‘டிஸ்போஸ் ஆன மனுக்கள்’ என்று விளக்கம் வழங்கியது.
அரசு அலுவலகத்தில் கொடுக்கப்படும் மனுக்களை டிஸ்போஸ் செய்யும் முறை இதுதானா? நாளையே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களைப் பற்றிய தகவல் கேட்டால் எப்படி அளிப்பார்கள்?
அது மட்டுமின்றி, புதிதாக கட்டப்பட்ட திருப்புவனம் தாலுகா அலுவலகத்திற்குள் புகுந்து வெளியாட்கள் திருடிச் சென்றதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
புகார் கொடுத்த தாசில்தாரை உடனே இடமாற்றம் செய்துள்ளதும் ஏன் என்று தெரியவில்லை. மாவட்ட அலுவலர்கள் நடந்த தவறை மறைக்க பார்க்கின்றார்களா என்பது தெளிவாக இல்லை.
முறையான விசாரணை நடந்தால் உண்மை வெளிவரும், இல்லையெனில் இந்த விவகாரம் கிடப்பில் போடப்படும் வாய்ப்பும் உள்ளது. திருடிச் சென்றுவிட்டார்கள் என்று புகார் கொடுத்ததன் மூலம், அரசு அலுவலகங்களும் பாதுகாப்பாக இல்லை என்று அரசே ஒப்புக்கொண்டதாகும். இனி பொதுமக்கள் அதிகாரிகளை நம்பி மனுக்களை கொடுப்பார்களா? எளிய மக்களின் குறைந்தபட்ச நம்பிக்கையையும் தி.மு.க அரசு காலி செய்துவிட்டது” என்று அவர் கூறினார்.
தற்போது, திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வே துறையில் உள்ள 7 பேருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது.
இந்த விவகாரம் முதலமைச்சர் வரைக்கும் டென்சனை உண்டாக்கியதால், உடனே விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்க கலெக்டர் பொற்கொடியை தொடர்பு கொண்டதற்கு, தொடர்பில் வரவில்லை.

கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில்,
“திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களின் நகல்கள் கிடைக்கப் பெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில், சிவகங்கை ஆர்.டி.ஓ தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட மனுக்களின் நகல்கள் வெளிவந்தது தொடர்பாக, திருப்புவனம் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்.பி-யிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக விரோதச் செயலில் ஈடுபட்டுள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது.”
என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, திருப்புவனம் தாலுகா அலுவலக சர்வே பிரிவில் பணியாற்றுபவர்களிடம் திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் யாராவது ஒருவர் மனுக்களை ஆற்றில் வீசினாரா, அல்லது வாகனத்தில் மனுக்களை கொண்டு செல்லும்போது தவறி விழுந்ததா என்று விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், “எதுவாக இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசிடம் அளிக்கப்படும் மனு என்பது ஒரு மனிதரின், ஒரு குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்டது. அவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது இந்த சம்பவம்.” என்று கூறுகிறார்கள்.
உண்மை விரைவில் கண்டறியப்பட வேண்டும்!