
விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படம் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனவர் கணேஷ் சந்திரா. தொடர்ந்து ‘ஜெயில்’, ‘காரி’, தெலுங்கு படமான ‘மிஸ் மேட்ச்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அவர், இப்போது இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் ஒளிப்பதிவு செய்து இயக்கும் படத்துக்கு ‘பூக்கி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில், அஜய் திஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனுஷா நடிக்கிறார். பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரொமான்ஸ் காமெடி கதையாக உருவாகும் இப்படத்தை, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. படம் பற்றி இயக்குநர் கணேஷ் சந்திரா கூறும்போது, “இன்றைய தலைமுறையினரின் காதலுக்கு அவர்களே பிரச்சினையாக இருக்கிறார்கள். அப்படியான காதலர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து ரொமான்டிக் காமெடி படமாக இது உருவாகிறது” என்றார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் ஒரே கட்டமாக நடக்கிறது.