
சென்னை: சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசிய பேச்சு சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் பொன்முடி பதவியை இழந்தார். மேலும், பொன்முடிக்கு எதிராக 140-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீஸில் அளிக்கப்பட்டன. அத்துடன் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷும், பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.