
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் சிறப்பு ஜிஎஸ்டி வரியாக ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என அவர் கூறினார்.
வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் ‘தினசரி மக்கள் பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்டவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்கப்படும். கல்வி சார்ந்து எழுதுபொருளான பென்சில், ஷார்ப்னர், கிரேயான்ஸ், நோட்டுப்புத்தகம், எரேசர், வரைபடங்கள், சார்ட் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை. ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்படுகிறது. 350 சிசி திறன் மற்றும் அதற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். விவசாய உபகரணங்களுக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா, குட்கா, இனிப்பு கலந்த பொங்கலுக்கு 40% சிறப்பு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.