
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
தெரு நாய்கள் பற்றி தமிழகத்தில் கடுமையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் என்னுடைய பார்வை…
இந்த உலகத்தில் பிறந்த அத்தனை உயிரினங்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் வாழ்கிறது. மனிதன் உள்பட அனைத்து உயிர்களுமே “இது எங்களுடைய ஏரியா” என்று தீர்மானம் செய்து தான் வாழ்கிறது. அதை மதிக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. எப்போது எல்லைத் தாண்டுகிறோமோ அப்போதெல்லாம் மோதல்கள் நடந்து விடுகிறது.
ஆறறிவு உயிரினமான நாம் மட்டும், நம்முடன் பழக நமக்குத் தேவைக்காக சில விலங்குகளை வீடுகளிலே வளர்க்கிறோம். அந்தத் தேவை முடிந்தது என்றால் அவற்றை விட்டு விடுவது நலம்.
உதாரணத்திற்கு வீட்டுக்கு வீடு மாடுகள் வைத்திருந்தோம் விவசாய நிலங்களை உழுவதற்கும், பாலுக்காகவும் பயன்படுத்தினோம். பெரும்பாலானவர்கள் விவசாயத்தை விட்டு விட்ட பொழுது மாடுகள் வளர்ப்பதையும் விட்டு விட்டோம்.
கிராமப் பகுதியில் சில பேர் மாடுகளை வளர்க்க முடியும் என்றால் வளர்க்கிறார்கள். அதேபோல் கோழி வளர்க்கிறார்கள், ஆடு வளர்க்கிறார்கள், பறவைகள் வளர்க்கிறார்கள், நாய்களையும் வளர்க்கிறார்கள்.
எப்பொழுது தேவை இல்லை அல்லது பராமரிக்க முடியவில்லை என்று வரும்போது அதை விட்டு விடுகிறார்கள்.
நாயினுடைய தேவை எப்பொழுது இருந்தது? வீடுகள் சுற்றி காடுகள் இருந்தது மனிதர்களையும் நம் வீட்டையும் பாதுகாப்பதற்கு நாய் தேவைப்பட்டது. தோட்டங்களை பாதுகாப்பதற்கு நாய் தேவைப்பட்டது.
ஆக ஒரு காலகட்டம் வரை நாய் என்பது பாதுகாப்புக்காக மட்டுமே வளர்க்கப்பட்டது.
இன்றைக்கு நம் வீடுகளை பாதுகாப்பதற்கு சுற்றிலும் தடுப்புகளும் இன்னும் பெரிய இடங்களில் காவலர்களையும் நியமித்து விட்டோம். சிசிடிவி கேமரா போன்ற பல பாதுகாப்பு சாதனங்களால் நம் வீடு பாதுகாக்கப்படுகிறது. பெரும்பாலும் தோட்டங்கள் என்பது கிராமப் பகுதிகளில் மலை கிராமங்களில் மட்டும் தான் உள்ளது. அங்கு சில காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க நாய்களை வளர்க்கிறார்கள்.
பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட அந்த தேவைகள் ஊர்ப்புறங்களில் இன்று தேவையில்லை என்றாகிவிட்டது. முன்னெல்லாம் நாய் வளர்ப்பவர்கள் அந்த நாய்க்குச் சொந்தக்காரர்கள் தங்களுடைய பகுதி பஞ்சாயத்து அலுவலகங்களில் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆனால் இன்றைக்கு தெரு நாய்களுக்கு யார் முதலாளி என்பதும் தெரிவதில்லை. யார் அதை வளர்க்கிறார் என்பதும் தெரியவில்லை. கட்டுக்கடங்காமல் அதனுடைய வளர்ச்சி இருக்குமென்றால் கண்டிப்பாக அது இன்னொரு இனத்தை அழிக்கத்தான் முயலும். அது ஆட்டைப் போலவோ கோழிகளைப் போலவோ சாதுவானது கிடையாது. மேலும் உயிரைக் கொல்லும் விஷத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறது. நரிக் கூட்டம் காட்டிலே என்ன செய்யுமோ அதைத்தான் நாய்கள் செய்யும்.
வடநாடுகளிலே காளை மாடுகள் தெருவிலே விடப்படுகின்றன. அவைகள் தெருவோர கடைகள் பொதுமக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. அதைப் பராமரிப்பதற்காக கோ சாலைகள் நிறுவப்படுகின்றன.

நாய்களுக்கு பாதுகாப்பான இடமாக காடுகளை தான் நான் பரிந்துரைப்பேன். இவைகளை அடர்ந்த வனப்பகுதியில் ஒரு பாதுகாப்பு மையத்தை உருவாக்கி அவைகளுக்கு உணவு போன்ற தேவைகளை வனத்துறை கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
இரண்டாவதாக நாய்களைச் செல்லப்பிராணியாக வளர்கிறார்கள். அவைகளைப் பெரும்பாலும் பாதுகாப்பான முறையில் பராமரித்து வளர்க்கிறார்கள். அது இனப்பெருக்கம் செய்வதுமில்லை பெரும்பாலும் ஒற்றை நாய்களைத் தான் வளர்க்கிறார்கள். இவைகளால் பெரும்பாலும் மக்களுக்கு துன்பம் நேர்வதில்லை. இறக்கும் வரை மனிதர்களோடு வாழ்ந்து விட்டு போய்விடுகிறது.
இந்த இரண்டையும் ஒன்றாக பார்க்கும் பொழுது தான் விவாதங்கள் ஏற்படுகிறது.
அனாதையாக, கும்பல் கும்பலாக சுற்றி திரியும் விலங்கு தெருநாய்.
பாதுகாப்பாக செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் விலங்கு வளர்ப்பு நாய்.
இரண்டும் இரண்டு வித சூழலில் வளர்கிறது. ஆகவே மீண்டும், வீடுகளிலே செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களுக்கு முறையான அனுமதியை பெறவைத்து அடையாள அட்டை கட்டியிருக்கும் நாய்களுக்கு மட்டும் அனுமதியைத் தந்து மற்றவற்றை அடர்ந்த வனப்பகுதியில் விடுவது தான் சரியானதாக இருக்கும்.
அப்படி நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க நினைப்பவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!