
கோவை மாவட்டம், ஆனைமலையை சுற்றி 38 கிராமங்கள் உள்ளன. அதில் நெடுங்குன்றம் என்கிற ஒரு கிராமத்தை தவிர மற்ற கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இவர்கள் பலரும் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு, அப்பர் ஆழியார் போன்ற அணை கட்டுமானங்களுக்காக தங்களின் இருப்பிடங்களை இழந்தவர்கள்.
அதேநேரத்தில் அவர்கள் கிராமங்களின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள், வனத்துறை அலுவலகங்கள், விருந்தினர் இல்லம், சுற்றுலா பகுதிகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. இது அந்த மக்களின் வேதனையை மேலும் அதிகரிக்கிறது.
இதுகுறித்து பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் தனராஜிடம் பேசியபோது, “கோழிக்கமுத்தி என்கிற கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அந்த வழியில் உள்ள விருந்தினர் இல்லங்களுக்கு மின்சார வசதி தரப்பட்டும், கோழிக்கமுத்தி கிராமத்தில் மின்சார வசதி தரப்படவில்லை.

கீழ்பூனாட்சி கிராமத்தில் உள்ள ஒரு பகுதி மக்கள் மின்சார வசதிக்காக கோரிக்கை வைக்கிறபோது, அங்குள்ள அதிகாரிகள் இது புலிகள் சரணாலயம் என்பதால் மின்சாரம் கொடுக்க முடியாது என்று அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அந்த கிராமத்திற்கு சென்று மக்கள் கோரிக்கைகளை விசாரித்து, அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படும் என கூறினார்.
எருமைப்பாறை கிராமத்தில் அந்த மக்கள் மின்சாரம் அமைப்பதற்கான கட்டணத்தை (28 குடும்பங்கள் தலா ரூ.3,800) செலுத்தியும், நடைமுறையில் இல்லாத செயல்முறைகளை கூறி காலம் தாழ்த்தி வருகிறார்கள். 2006 வன உரிமைச் சட்டப்படி, பழங்குடி கிராமத்தில் வசிக்கும் இடத்திற்கு பட்டா வாங்கப்பட்ட பிறகு அது வருவாய் கிராமமாக கருதப்பட்டு சாலை, மின்சாரம், குடிநீர், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய இடமுள்ளது.


ஆனால் சட்டத்தை சரியாக பின்பற்றாமல் பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிகளை மறுத்து வருகிறார்கள். அரசு உடனடியாக ஆனைமலை பழங்குடி கிராமங்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.” என்றார்.