
விருதுநகரில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாத சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா திருத்தேரோட்டத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார்.
விருதுநகரில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான 800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டும் இத்திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் மீனாட்சி சொக்கநாதருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை திருக்கயிலாய பஞ்ச வாத்தியங்கள் முழங்க திருத்தேரில் மீனாட்சி சொக்கநாதர் எழுந்தருள திருத்தேரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் .ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுக்க ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்தனர்.
நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமதிலகம் ஏற்பாடு செய்திருந்தார்.