
சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
அத்துடன் சீனாவின் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்திய அமெரிக்கர்கள் நினைவுகூறப்படுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில், “கொஞ்மும் நட்பில்லாத அந்நியப்படையெடுப்பிலிருந்து சீனாவின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மிகப் பெரிய அளவில் அமெரிக்கர்கள் ரத்தம் சிந்தி அளித்த ஆதரவை சீன அதிபர் குறிப்பிடுவாரா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.
சீனாவின் வெற்றிக்காகவும் மகிமைக்காகவும் பல அமெரிக்கர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்காக அவர்கள் சரியான முறையில் கௌரவிக்கப்படுவார்கள், நினைவுகூரப்படுவார்கள் என்று நம்புகிறேன்!” என எழுதியிருக்கிறார் ட்ரம்ப்.
அத்துடன், “அதிபர் மற்றும் அற்புதமான சீன மக்களுக்கு சிறந்த நீடித்த கொண்டாட்ட நாளாக இருக்கட்டும். அமெரிக்காவிற்கு எதிராக சதி நீங்கள் செய்துகொண்டிருக்கையில், விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என வஞ்சப்புகழ்ச்சியில் வாழ்த்தியுள்ளார்.

சீனாவில் மா சே துங் தலைமையில் கம்யூனிஸ ஆட்சி உருவாவதற்கு முன்பு, கோமிண்டாங் கட்சியின் ஆட்சியில் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் சீனாவை ஆக்கிரமிக்க முயன்றது. அப்போது அமெரிக்க ராணுவம் சீனாவுக்கு உதவியது. குறிப்பாக ‘வைட் டைகர்ஸ்’ என்ற விமானப்படை ஜப்பான் போர் விமானங்களை எதிர்த்து சண்டையிட்டது. இதில் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வரலாற்று நிகழ்வையே சுட்டிக்காட்டியுள்ளார் ட்ரம்ப்.
இரண்டாம் உலகப்போர் முடிவின் 80வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் சீனா மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. இதில் கலந்துகொள்ள ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த அணிவகுப்பில் சீன ராணுவத்தின் பல ஆயுதங்கள் முதல்முறையாக பொதுமக்களுக்குக் காட்டப்பட்டன. 2019ம் ஆண்டு கம்யூனிஸ சீனா உருவானதன் 70வது ஆண்டு விழாவுக்குப் பிறகு சீனா நடத்தும் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.