
வெற்றிமாறன் தயாரித்திருக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தோடு தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாகச் சமீபத்தில் அவர் அறிவித்திருந்ததும் பலருக்கும் நினைவிருக்கலாம்.
இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி வெற்றிமாறனும் சில நேர்காணல்கள் கொடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் ‘விசாரணை’ திரைப்படத்தின் தயாரிப்பு பக்கம் பற்றிப் பேசியிருக்கிறார்.
வெற்றிமாறன் பேசுகையில், “விசாரணை படத்திற்காக தனுஷிடம் ‘என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது’ என்றதும் அவர் ‘சார் கதை சொல்லாதீர்கள்.
கதை பிடித்துவிட்டால் அதில் நான் நடிக்க வேண்டுமென்கிற எண்ணம் வந்துவிடும். எனக்கும் இப்போது கமிட்மென்ட்கள் இருக்கின்றன. படத்திற்கான பட்ஜெட்டைச் சொல்லிவிடுங்கள். நான் தந்துவிடுகிறேன்’ என்றார்.
படத்தின் தயாரிப்புப் பணிகளுக்காக 2.5 கோடி ரூபாயையும் தனுஷ் தந்தார். கடைசியாக ‘விசாரணை’ திரைப்படத்தை வெனிஸ் திரைப்பட விழாவிற்குப் பிறகுதான் பார்த்தார். அதுவரை அவர் படத்தைப் பார்க்கவில்லை.
பிறகு ஆஸ்கர் கேம்பெயின்களுக்காக ரூ. 3.5 கோடியும் அவர் செலவழித்தார்.
இவையெல்லாம் எனக்கு ஒரு கற்றல் அனுபவம். அப்படியான தயாரிப்பாளர்கள் எல்லாம் கிடைக்கவே மாட்டார்கள்.
‘விசாரணை’ படத்தை ரூ. 2.75 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடித்தோம். அப்படத்திற்கு நான், தினேஷ், ஜி.வி.பிரகாஷ், கிஷோர், படத்தொகுப்பாளர் கிஷோர் என எவரும் சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை.
சமுத்திரக்கனி வெறும் 5 லட்சம் மட்டும் சம்பளமாகப் பெற்றுக் கொண்டார். அவருக்கு நாங்கள் சம்பளம் வாங்காதது தெரியாது. தெரிந்திருந்தால் அவரும் வாங்கியிருக்க மாட்டார். திரையரங்க வெளியீட்டில் திரைப்படம் ரூ. 3.85 கோடி வசூலித்தது.
இன்று அப்படியான படத்தை எடுக்க 8 கோடி வரை செலவாகும்” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…