
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த வரிகள் அமலுக்கு வந்துவிட்டன.
இதனால், அமெரிக்காவிற்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ஸ்.
“இந்த ஆண்டு, அமெரிக்காவிற்கு வரும் வரி மூலமான வருமானம் 300 பில்லியன் டாலர்களைத் தொடலாம். அதற்கு மேலும் கூட செல்லலாம்.
ஒவ்வொரு 300 பில்லியன் டாலரும் அமெரிக்காவின் மொத்த உற்பத்தி திறனை 1 சதவீதம் அதிகரிக்கும்.
இந்த வரிகளால் மட்டும் 5 சதவீத வளர்ச்சியை அடையலாம்” என்று தெரிவித்துள்ளார்.
புள்ளிவிவரங்கள்
மேலும், அவர் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான வரி வருமானம் குறித்த புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் ஜனவரி மாதம், அமெரிக்காவின் வரி வருமானம் கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலராக இருந்துள்ளது. அடுத்த எட்டே மாதங்களில், அந்த வருமானம் 31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளின் மீது ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டத்திற்கு புறம்பானவை என்று அமெரிக்க பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார் ட்ரம்ப்.
ஒருவேளை, அதில் ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பு வந்தால், இந்த வருமானங்கள் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.