
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பிரபல மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மருந்து நிறுவன உரிமையாளர், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய சுமார் 10 இடங்களில் அடுத்தடுத்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், புரசைவாக்கத்தில் உள்ள அவரின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு 2 வாகனங்களில் விரைந்த 8 அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற் கொண்டனர். இதேபோல், அவருக்குச் சொந்தமாக அம்பத்தூரில் உள்ள மருந்து நிறுவன தொழிற்சாலையிலும் சோதனை நடத்தினர்.