
தங்கம் விலை ஒருபக்கம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்க, மக்கள் மேலும் மேலும் தங்கத்தை வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கம் விலை என்றைக்கு அபாரமாக உயர்கிறதோ, அன்றைக்கெல்லாம் தங்க நகைக் கடைகளில் அதிகமான கூட்டத்தையே பார்க்க முடிகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மக்கள் தங்களிடம் இருக்கும் நகையை வங்கிகள், வங்கி அல்லாத நிறுவனங்களில் அடமானம் வைத்து பணம் பெறுவதும் ஏகத்துக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தை அடமானமாக வைத்துப் பணம் பெறுவது 122% அதிகரித்திருக்கிறது.
23-ல் 95,000 கோடி… 25-ல்….
கடந்த 2023-ல் வங்கிகளில் தங்கத்தை அடமானமாக வைத்துப் பெற்ற கடன் தொகை ரூ.95,344 கோடியாக இருந்தது. இது 2024-ல் மார்ச்சில் ரூ.1,02,562 கோடியாக உயர்ந்தது. ஆனால், அதே ஆண்டில் ஜூலையில் ரூ.1,32,535 கோடியாக உயர்ந்தது. இதுவே 2025 மார்ச்சில் ரூ.2,08,735 கோடியாகவும், 2025 ஜூலையில் ரூ.2,94,166 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

ஏன் இவ்வளவு அடமானக் கடன்…?
தங்க நகை அடமானக் கடனை மக்கள் இவ்வளவு தூரம் வாங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம், மிகக் குறைந்த விலையில் வாங்கிய தங்கத்தை அடமானமாக வைத்துப் பெரும் பணத்தைப் பெற பலரும் நினைக்கிறார்கள். நம்முடைய மக்கள் தங்கத்தை ஒரு சொத்தாகவே பாவிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு 1000 ரூபாய் தந்து வாங்கிய தங்கத்தை அடமானமாக வைத்து ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை கடன் பெறுகிறார்கள். இந்த அளவுக்கு அதிகமான கடனைப் பெற்றுத் தரும் சொத்து வேறு எதுவும் இருக்க முடியாது என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது.
இரண்டாவது காரணம், குறைந்த வட்டி. இன்றைக்கு பர்சனல் லோன், வீட்டுக்கடன், கார் கடன் என எல்லாக் கடனுக்கான வட்டி விகிதங்களைத் தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, குறைவு. தவிர, அடமானம் வைத்துப் பணம் பெறுவதற்கான வழிமுறையும் வெகு சுலபமானது. மேலும், வங்கிகளும் தங்க நகையைப் பெற்று, கடன் தருவதில் ரிஸ்க் குறைவு என்று நினைக்கிறது.

பணத்தை என்ன செய்கிறார்கள்?
தங்கத்தை அடமானமாகப் பெறும் பணத்தை வைத்து மக்கள் என்ன செய்கிறார்கள் என்கிற கேள்விக்குப் பலரும் பல விதமான பதிலை சொல்கிறார்கள். பெரும்பாலான மக்கள் தங்கத்தை அடமானமாக வைத்துப் பெறும் பணத்தை வைத்து, புதிதாக தங்கத்தை வாங்குகிறார்கள். இதன் மூலம் தங்கத்தில் மேலும் லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.
அடுத்து, வீடு வாங்குவதற்கான முன்பணத்தைக் கொடுப்பதற்கு தங்கத்தை அடமானமாக வைக்கிறார்கள். இன்னும் சிலர், கார் வாங்கவும் இந்த அடமானக் கடனைப் பயன்படுத்துகிறார்கள்.
உஷார், உஷார்!
தங்கம் விலை சில மாதங்களுக்கு முன்பு சில நாள்களில் 10 சதவிகிதத்திற்கு மேல் விழுந்தது. அது போல, இனி நடந்தால் என்ன செய்வது என்கிற விஷயத்தில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.