
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது அடுத்த கட்ட நகர்வை வருகின்ற 5 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளதால் மதுரை மாவட்ட பிரசாரப் பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை ஜி.ஆர்.டி ஹோட்டலில் அ.தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மதுரை மாவட்ட தொழில்துறையினர், விவசாயச் சங்கத்தினர், பல்வேறு தொழில் சார்ந்த சங்க பிரதிநிதிகளுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி இறுதியாகப் பேசும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழில் முனைவோருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்போம். அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 300க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றினோம்.
10 ஆண்டுகளில் இரண்டு முறை மாநாடு நடத்தி வெற்றிகரமாக முதலீட்டாளர்களை ஈர்த்துப் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்தோம்.
மதுரை விமான நிலைய தரம் உயர்த்தும் விவகாரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதாகச் சொன்னதால் அந்தப் பணிகள் முடங்கியது. இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய சுரங்க வழிப்பாதைக்கும் அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசுடன் இணைந்து சர்வதேச விமான நிலையம் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்போம்.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. காவல்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தது. தொழில் செய்பவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தோம், இருப்போம். தொழில் துறையினருக்கான புதிய தொழில் தொடங்குவதற்கு சிங்கிள் விண்டோ சிஸ்டம் உருவாக்கப்படும்.
மதுரை ஒரு ஆன்மீக பூமி. மதுரையின் சுற்றுலா சார்ந்த மேம்பாட்டுக்கு நிறைய வசதிகளைச் செய்து கொடுப்போம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பல்வேறு போராட்டங்கள் நடத்திக் கொண்டு வந்தது நாங்கள்தான்” என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயச் சங்கப் பிரமுகர் அ.தி.மு.க ஆட்சியையும், எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்தும், தி.மு.க அரசை இகழ்ந்தும் பேசியதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் மற்றொரு தொழில்துறை நிர்வாகி எழுந்து நின்று கண்டித்துப் பேசியதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்பு ஒருவித சலசலப்புடன் இந்தக் கூட்டம் முடிந்தது.