
முதலமைச்சர் தொடங்கி வைத்தும், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக வராமல் முடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
நெல் விவசாயம், வெற்றிலை கொடிக்காலுக்கு புகழ்பெற்ற சோழவந்தானில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, மக்களின் நீண்டகால கோரிக்கையை தொடர்ந்தே கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரயில்வே மேம்பாலம் மற்றும் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கினார்.
கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நீண்டகாலம் நடந்த நிலையில், மக்களின் வலியுறுத்தலை தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால், பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் முடியாத நிலையில் ஒருவழியாக கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
அதே நேரம், ரயில்வே மேம்பாலம் முறையாக திறக்காத நிலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், “பேருந்து நிலையம் இன்னும் மக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை” என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். நம்மிடம் பேசிய சோழவந்தான் மக்கள் கூறியதாவது:
“முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாலும், பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலையும், மேம்பாலத்திலிருந்து பேருந்துகள் வந்து திரும்புவதற்கான ரவுண்டானாவும் அமைக்கப்படாததால், எந்த பேருந்தும் பேருந்து நிலையத்திற்குள் வராமல் ஊருக்குள் வெவ்வேறு பகுதிகளில் நின்று சென்று கொண்டிருக்கிறது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திலும், தொகுதி எம்.எல்.ஏ வெங்கடேசனிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
அரசு போக்குவரத்துக் கழகம்
அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டால், ‘சர்வீஸ் சாலை அமைத்துக் கொடுத்தால்தான் பேருந்துகள் உள்ளே வந்து செல்ல முடியும்; சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டிய இடத்தில் மின்கம்பம் உள்ளது, அதை அகற்ற வேண்டும்’ என்கின்றனர்.
மின்வாரியம்
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், ‘பேரூராட்சி நிர்வாகம்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என்கின்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், ‘பேருந்து நிலையம் அமைப்பது மட்டுமே எங்கள் பணி; மற்ற பணிகளை அந்தந்த துறையினர்தான் செய்ய வேண்டும்’ என ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள்.

எம்.எல்.ஏ வெங்கடேசன் நடவடிக்கை
சர்வீஸ் சாலை அமைக்க தடையாக உள்ள மின் கம்பத்தை அப்புறப்படுத்த எம்.எல்.ஏ வெங்கடேசன் மின் வாரிய அதிகாரிகளிடம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டும், அதிகாரிகள் அதை கவனிக்கவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோழவந்தான் பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலம் பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்தவுடன் சோழவந்தான் பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என இத்தொகுதியில் போட்டியிடுபவர்கள் வாக்குறுதி கொடுத்தாலும் கொடுப்பார்கள்” என்று வேதனையுடன் கூறினர்.
“மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களின் அலட்சியத்தால் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையமும், ரயில்வே மேம்பாலமும் பொது மக்களுக்கு பயன்படாத நிலையில் வெறும் காட்சி பொருளாக உள்ளது” என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.