• September 3, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, புதுச்சேரியில் தவெக ஒரு புதிய கூட்டணியை அமைக்கப் போகிறது என்பது உண்மைக்குப் புறம்பான தகவல் என கூறியுள்ளார்.

TVK Vijay

‘உண்மைக்கு புறம்பான தகவல்…’

ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

‘தலைவர் அறிவிப்பார்…’

இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள்.

கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.

TVK Vijay
TVK Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் அவர்கள் விரைவில் அறிவிப்பார்.

தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது. எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் ஆனந்தின் பிறந்தநாளன்று அவரின் இல்லத்துக்கே நேரில் வந்து புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வாழ்த்து கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்தே என்.ஆர்.காங்கிரஸூம் தவெகவும் கூட்டணி அமைக்கப் போகிறதா எனும் பேச்சுகள் எழுந்திருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *