
இரண்டாம் உலகப் போர் முடிவின் 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று சீனாவில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடந்தது.
இந்த அணிவகுப்பை 26 உலக நாடுகளின் தலைவர்கள் கண்டுகளித்தனர். இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட்ட இருவர், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்.
இந்த இருவரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் இந்த இரு நாட்டு தலைவர்களும் ராணுவ அணிவகுப்பைக் கண்டுகளித்த புகைப்படம் இப்போது பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.
சீன அரசின் பலம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜின்பிங், ஜப்பானின் ஆதிக்கத்திற்கு எதிராக சீனா வெல்வதற்கு காரணமாக இருந்த உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார்.
சீனா அரசு தனது படை, ஆயுத மற்றும் ராணுவ பலத்தைக் காட்ட புதிய தலைமுறை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், போர் விமானங்கள், ஆரம்ப எச்சரிக்கை விமானங்கள் மற்றும் விமான நெரிசல் அமைப்புகள் ஆகிய அதிநவீன ஆயுதங்களை முக்கியமாக காட்சிப்படுத்தியது.
அமெரிக்காவைக் குறிப்பிடாத ஜின்பிங்
ஜின்பிங் தனது பேச்சில் அமெரிக்க நாட்டின் பெயரைக் குறிப்பிடவில்லை. இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இந்தப் போரின் முடிவிற்கு அமெரிக்கா முக்கிய பங்காற்றியுள்ளது.
ஜின்பிங் அமெரிக்காவின் பங்களிப்பைக் குறிப்பிடாததை அடுத்து, ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், “சீனா விடுதலைப் பெற, அமெரிக்கா அதற்கு தந்த மிகப்பெரிய அளவிலான ஆதரவையும், அமெரிக்கா சிந்திய ரத்தத்தையும் சீன அதிபர் ஜி குறிப்பிடுவாரா?” என்ற பெரிய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். அவர்களின் வீரம் மற்றும் தியாகம் சரியாக கௌரவிக்கப்படும், நினைவுகூரப்படும் என்று நான் நம்புகிறேன்.
சீன அதிபர் ஜி மற்றும் சீனாவின் மக்கள் சிறந்த தினத்தை கொண்டாடட்டும்.
நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் போது, விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உனக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் கோபமும், மிரட்டலும் இரண்டும் கலந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.
ட்ரம்பிற்கு என்ன கோபம்?
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, அமெரிக்கா சென்றிருந்த புதின், ட்ரம்ப் உடனான சந்திப்பு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் ரஷ்யாவிற்கு கிளம்பிவிட்டார்.
ஆனால், சீனாவில் இப்போது புதின் மூன்று நாள்களாக இருக்கிறார்.
மேலும், சீனாவில் இந்திய பிரதமர் மோடி உடன் அதிக நட்புடன் இருந்தார் புதின். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான அமைதி பேச்சுவார்த்தைப் பற்றி இன்னமும் வாயைத் திறக்கவில்லை அவர்.

இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஒற்றுமையாக இருக்கிறதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் மூன்று நாட்டு தலைவர்களும் வலுவாக தெரிவிக்கின்றனர்.
இதெல்லாம் நிச்சயம் ட்ரம்பிற்கு கடுப்பாகவே இருந்திருக்கும்.
போதாக் குறைக்கு, அமெரிக்காவின் பெயரை தனது உரையில் ஜின்பிங் குறிப்பிடவில்லை.
உலகமே ஒரு வழியில் போனால், கிம் ஜாங் உன் தனி வழியில் தான் செல்வார். அது உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் இப்போது சீனாவில் உள்ளார்.
இந்தக் கோபங்களை எல்லாம் ட்ரம்ப் எப்படி பிரதிபலிப்பார் என்பதைப் பொறுத்து பார்க்கலாம்.