
மைக் செட் கட்டுவதில் பிரச்னை
திண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி பூதகடி கிராமத்திலுள்ள கோயில் திருவிழா கடந்த ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது.
இதில் மைக் செட் கட்டுவதில் இரு சமூகங்களிடையே பிரச்னை ஏற்பட்டது. பிரச்னையில் ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று செல்வகுமாரின் மனைவி வர்ஷா பூதகுடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசாரும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நான்கு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை அவர் கைவிட்டார்.
போராட்டம்
இந்த வழக்கை திரும்ப பெறக் கோரி 300-க்கும் மேற்பட்ட முத்தரையர் சமுதாயத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்காக ஆடு, டிவி, அடுப்பு, பீரோ, பாத்திரங்கள், குளிர்சாதன பெட்டி ஆகியவற்றுடன் வந்த சுமார் 300 முத்தரையர் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அனுப்பி வைத்தனர்.