
மராத்தா இட ஒதுக்கீடு
மும்பையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல், மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே, மராத்தா சமுதாயத்திற்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தார்.
மாநில அரசு ஒரு நாள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி கொடுத்தபோதிலும், அதனை ஏற்றுக்கொள்ளாமல், அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் செய்து வந்தார்.
அவரோடு சேர்ந்து 5,000 பேர் மட்டுமே மும்பை ஆசாத் மைதான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்திருந்த போதிலும், ஆசாத் மைதானத்திற்கு 30,000 பேர் வந்தனர்.
ஸ்தம்பித்த தென்மும்பை
அவர்கள் தென்மும்பையை ஸ்தம்பிக்க செய்துவிட்டனர். இதனால் தென்மும்பையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதிகமான அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
தென்மும்பை சாலைகளை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து, சாலையிலேயே சமையல் செய்து சாப்பிட ஆரம்பித்தனர்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் நேற்று மாலைக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் காலி செய்ய வேண்டும் என்று மனோஜ் ஜராங்கேவிற்கு உத்தரவிட்டது.
நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிற்பகல் 3 மணிக்குள் ஆக்கிரமிப்பு சாலைகளை காலி செய்யவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.
போராட்டம் தொடங்கியதில் இருந்து மனோஜ் ஜராங்கேயுடன் எந்த வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாத அரசு, நேற்று திடீரென மனோஜ் ஜராங்கேயுடன் அமைச்சரவை துணை கமிட்டியை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியது.
இப்பேச்சுவார்த்தையில் மனோஜ் ஜராங்கே தெரிவித்த அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்றும், ஐதராபாத் அரசாணையில் கும்பி இனத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு OBC சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அரசு உத்தரவாதம் கொடுத்தது.
அரசின் உத்தரவாதங்களை அரசாணையாக வெளியிட்டால், இரவு 9 மணிக்குள் ஆசாத் மைதானத்தை காலி செய்யப்படும் என மனோஜ் ஜராங்கே தெரிவித்து இருந்தார். ஆனாலும், அனைத்து மராத்தா சமுதாய மக்களையும் கும்பி சமுதாயத்தினராக அங்கீகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
சொன்னபடி, அமைச்சர்கள் கமிட்டி அரசாணையை கொண்டு வந்து கொடுத்தவுடன், இரவில் மனோஜ் ஜராங்கே தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், “நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். இதுவே எங்களுக்கு தீபாவளி. நாங்கள் எதிர்பார்த்தது எங்களுக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
மனோஜ் ஜராங்கே போராட்டத்தை முடித்ததை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அவர்களை இசைக்கருவிகளை கொண்டு இசை இசைத்து நடனமாடி, செல்பி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
போராட்டக்காரர்கள் ரயில் மூலம் நவிமும்பைக்கு கிளம்பிச் சென்றனர். அவர்கள் அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.
இரவோடு இரவாக மனோஜ் ஜராங்கேயும், அவருடன் வந்தவர்களும் ஆசாத் மைதானத்தை காலி செய்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
அதனை தொடர்ந்தே தென்மும்பை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. 5 நாட்களுக்கு பிறகு இன்று காலையில் தான் தென்மும்பையில் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “அனைத்து மராத்தா சமுதாயத்தினரும் ஒட்டுமொத்தமாக கும்பி இனத்தவராக அங்கீகரிக்கப்படமாட்டார்கள். அதில் சட்டச் சிக்கல் உள்ளது. இதோடு, இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். இது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய இரண்டு மாதங்கள் தேவைப்படுகிறது. அதனை மனோஜ் ஜராங்கே ஏற்றுக்கொண்டுள்ளார்” என்றார்.