• September 3, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என்னுடைய 10 வயதுக் குழந்தைக்கு  மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வர என்ன காரணம், அதை எப்படிச் சரிசெய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

உணவுப்பழக்கம்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது மிகவும் சகஜமாகப் பார்க்கிற விஷயமாக இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம், அவர்களது உணவுப்பழக்கம்.

நார்ச்சத்து அறவே இல்லாத அல்லது நார்ச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பாதிப்பு வரும். காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்றவை குழந்தைகளின் தினசரி உணவுப்பட்டியலில் இல்லை என்றால், அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

பால், தண்ணீர் குடிக்கும் அளவு

பொதுவாகவே குழந்தைகளுக்கு அம்மாக்கள் நிறைய பால் கொடுப்பது வழக்கம். அதாவது தினமும் 300 முதல் 400 மில்லி பால் கொடுக்கிறார்கள்.  அதைவிட அளவு தாண்டும்போது, அதுவும் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு காரணமாகலாம்.

குழந்தைகளைப் பொறுத்தவரை தண்ணீர் குடிக்கும் அளவு குறைவாக இருக்கும். தண்ணீர் தவிர்த்து, சூப், ஜூஸ் போன்றவற்றையும் அதிகம் குடிக்க மாட்டார்கள்.  உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதுவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். 

பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் சப்ளிமென்ட்டுகளும் சில நேரங்களில் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு டாய்லெட் டிரெய்னிங் மிக முக்கியம்.  பள்ளிக்கூடங்களில்  கழிவறை பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். இயற்கை உபாதையை அடக்குவதாலும் மலச்சிக்கல் வரலாம்.

எனவே, குழந்தைகளின் உணவில் போதுமான நார்ச்சத்து இருக்க வேண்டும். ஆப்பிள், கொய்யா போன்று தோலுடன் சில பழங்களைக் கொடுக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக்க வேண்டும்.

ஏசி அறையில் இருந்தாலோ, குளிர் காலத்திலோ தாகம் எடுக்காது. அந்தத் தருணங்களில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுத்து, அதை காலி செய்யப் பழக்கலாம். பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *