
கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார்.
அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ‘காஃபிபோசா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால், ரன்யா ராவும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாது; அவர்கள் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பல முறை ரன்யா ராவ் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத்துறை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதித்துள்ளது.
இதுதவிர, அவருடன் கைது செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் தருண் கொண்டராஜுவுக்கு ரூ.63 கோடியும், நகைக்கடை அதிபர் சாஹில் ஜெயின் மற்றும் பரத்குமார் ஜெயின் ஆகியோருக்கு தலா ரூ.56 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பெங்களூரு மத்திய சிறைக்கு சென்ற வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் தலா 250 பக்க நோட்டீஸும் 2,500 பக்க ஆவணங்களும் வழங்கினர்.
நேற்று மட்டும் 11,000 பக்க ஆவணங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று நால்வரிடமும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ரன்யா ராவ் வீட்டில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.2.67 கோடி ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் துபாய்க்கு 52 முறை சென்று தங்கம் கடத்தியது தெரியவந்துள்ளது.

நடிகை ரன்யா ராவ், போலீஸ் அதிகாரி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார். ராமச்சந்திர ராவின் நண்பர் ஒருவர் பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.
அவரை பயன்படுத்தித்தான் ரன்யா ராவ் நீண்ட நாள்களாக தங்கம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ராமச்சந்திர ராவுக்கு பணி வழங்கப்படாமல், கர்நாடக அரசு அவரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தது. சமீபத்தில்தான் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.