• September 3, 2025
  • NewsEditor
  • 0

டெல்லியில் வெள்ளப்பெருக்கு

டெல்லியில் நேற்றிரவு பெய்த மழையால் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லியின் டிரான்ஸ்-யமுனா பகுதிகளில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. யமுனா பஜார் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மத்திய நீராய்வுக் குழுவின் (Central Water Commission) தகவலின்படி, இன்று காலை 9 மணியளவில், பழைய யமுனை பாலத்தில் ஆற்றின் நீர்மட்டம் யமுனையின் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி, 205.81 மீட்டர் உயரத்தை எட்டியது. இந்த நீர்மட்டம் மேலும் உய்ந்து, இன்று இரவு 206.41 மீட்டர் வரை செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும், மத்திய நீராய்வுக் குழுவின் காலை 8 மணிக்கான தகவலின்படி, ஹத்னிகுண்ட் அணையிலிருந்து 1.76 லட்சம் கனஅடி, வசிராபாத் அணையிலிருந்து 69,210 கனஅடி, ஓக்லா அணையிலிருந்து 73,619 கனஅடி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. ஓக்லா அணையில் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளதால், யமுனையில் வெள்ளப்பெருக்கு மேலும் தீவிரமாகியுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

மயூர் விஹார் மற்றும் அதனைச் சுற்றிய கிழக்குக் கரைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் கால்வாய்களாக மாறி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

யமுனா பஜார் பகுதியில், யமுனையின் கரைகள் உடைந்து அதன் அருகிலுள்ள குடியிருப்பு காலனிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் உயரமான இடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

படகுகள் மூலம் வெளியேறும் மக்கள்

மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் படகுகள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். வெள்ள அபாயம் அதிகமாக உள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன், வெள்ளம் அதிகரிக்கும் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ரோந்து சென்று, விரைவான நடவடிக்கைக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *