
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட கட்சியின் புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் அன்புமணியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாமக மற்றும் வன்னியர் சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கட்சி வளர்ச்சிப் பணிகள், அன்புமணி செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, கட்சியின் புதிய உறுப்பினர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பெரியார், அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோரது படங்கள், கட்சியின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றுடன் ராமதாஸின் படமும் இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில், அன்புமணியின் புகைப்படம் இடம்பெறவில்லை. மேலும், அதிகாரபூர்வ கையொப்பத்தில், ‘நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.