
ராமேசுவரம் / கடலூர்: கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் கூறியுள்ளதற்கு, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த பின்னர், கடந்த 51 ஆண்டுகளில் முதன்முறையாக இலங்கை அதிபர் கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டை தீவில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பின்னர் மண்டைத்தீவு, நயினாத் தீவு மற்றும் கச்சத்தீவுகளுக்குச் சென்று பார்வையிட்டார்.