
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் மதுரை மேலூரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இந்தியா கூட்டணியையும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ‘ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். அந்த கூட்டணியில் காங்கிரஸூம் கம்யூனிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசி முல்லைப்பெரியாறு பிரச்னையை ஸ்டாலின் தீர்த்திருக்கலாமே? முல்லைப்பெரியாறு 5 மாவட்டங்களின் பிரச்னை. ஆனால், கருணாநிதியின் குடும்பம் மக்களுக்காக ஒன்றும் செய்யாது. குடும்பத்துக்காகத்தான் செய்துகொள்ளும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. எல்லா இடத்திலும் போதைப்பொருள் ஊடுருவியிருக்கிறது. நகரம் முதல் கிராமம் வரைக்கும் போதைப்பொருள் எளிதில் கிடைக்கிறது.
தாலிக்கு தங்கம் திட்டத்தில் என்ன பிரச்னை? அதை ஏன் நிறுத்தினீர்கள்? அதிமுக அரசு அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். பெண்களுக்கு ஸ்கூட்டருக்கு மானியமும் பழையபடியே வழங்கப்படும்.

திமுக 525 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அதில் 98% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பச்சைப் பொய் பேசியிருக்கிறார். இது கிராமங்கள் நிறைந்த பகுதி. இங்கே கேட்கிறேன். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவோம் என்றாரே மாற்றினாரா? 100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும் என்றாரே செய்தாரா? லேப்டாப் திட்டம் என்ன ஆனது?’ என்றார்.