• September 2, 2025
  • NewsEditor
  • 0

மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே 30 ஆயிரம் மராத்தா இன மக்களோடு சேர்ந்து மும்பையில் கடந்த 29ம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மும்பையின் தென்பகுதியில் உள்ள ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜராங்கேயின் ஆதரவாளர்களால் தென்மும்பை கடந்த நான்கு நாட்களாக அடியோடு ஸ்தம்பித்துவிட்டது. அனைத்து சாலைகள், மைதானங்களை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அரசு ஒரு நாள் மட்டும் உண்ணாவிரத போராட்டம நடத்த மனோஜ் ஜராங்கேவிற்கு அனுமதி கொடுத்திருந்தது.

ஆனால் போராட்டத்தை முடித்துக்கொள்ள முடியாது என்று மனோஜ் ஜராங்கே திட்டவட்டமாக சொல்லியதையடுத்து போராட்டத்தை தின அடிப்படையில் ஒவ்வொரு நாளாக நீட்டித்துக்கொள்ள அரசு அனுமதி கொடுத்து வந்தது.

5 ஆயிரம் பேருக்கு மட்டுமே போராட அனுமதி கொடுத்த நிலையில் 30 ஆயிரம் பேர் திரண்டதால் தென்மும்பை மக்கள் நெருக்கடியால் ஸ்தம்பித்தது. நேற்று மாநில அரசு இது தொடர்பாக மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் காலி செய்ய மனோஜ் ஜராங்கேவிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று காலையில் ஆசாத் மைதானத்தை காலி செய்யச் சொல்லி போலீஸார் மனோஜ் ஜராங்கேவிற்கு நோட்டீஸ் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. மனோஜ் ஜராங்கே சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ”அரசுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் எப்போது வேண்டுமானாலும் உடன்பாடு எட்டப்படலாம். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரும்பாலானவர்கள் ஆசாத் மைதானத்தை காலி செய்துவிட்டனர்.

எனவே உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ள அவகாசத்தை நீட்டித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து புதன்கிழமை காலை வரை ஆசாத் மைதானத்தில் இருக்க கோர்ட் அனுமதி வழங்கியது. அதோடு இன்று மாலை 3 மணிக்குள் தென்மும்பையில் உள்ள சாலைகளை பழைய நிலைக்கு கொண்டு வரவில்லையெனில் தாங்களே தெருவில் இறங்கவேண்டிய சூழ்நிலை வரும் என்றும், உத்தரவை மதிக்கவில்லையெனில் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மனோஜ் ஜராங்கேயுடன் மாநில அமைச்சரவை துணை கமிட்டி சந்தித்து பேசியது. இதில் அமைச்சர்கள் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், மாணிக்ராவ் கோக்டே, சிவேந்திர ராஜே போஸ்லே ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். அவரிடம் மனோஜ் ஜராங்கே எழுத்துப்பூர்வமாக தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தார். அக்கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றியது தொடர்பாக அரசாணையை கொண்டு வரும்படி அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் மனோஜ் ஜராங்கே அளித்த பேட்டியில், ”நமது வலிமையின் மூலம் வெற்றி பெற்று இருக்கிறோம். ஏழைகளின் சக்தியை இன்று புரிந்து கொண்டேன்” என்று தெரிவித்தார். மராத்தா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என்று மனோஜ் ஜராங்கே தெரிவித்து இருந்தார். அதனை ஏற்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஐதராபாத் அரசாணையில் இடம் பெற்றுள்ளவர்களையும் கும்பி இனத்தவர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு ஓ.பி.சி சான்று வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதனையும் ஏற்பதாக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் அதனை அமல்படுத்த இரண்டு மாதங்கள் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் அரசு தங்களது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட்டால் இன்று இரவு 9 மணிக்குள் ஆசாத் மைதானத்தை காலி செய்துவிடுவோம் என்று மனோஜ் ஜராங்கே உத்தரவாதம் கொடுத்து இருக்கிறார். போராட்டக்காரர்கள் இன்று மாலை 3 மணியில் இருந்து ஆசாத் மைதானத்தை காலி செய்துவிட்டு நவிமும்பைக்கு செல்ல ஆரம்பித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *