
சென்னை: காவிரி குறுக்கே தடுப்பணை கட்ட நிதியில்லையா என திமுக அரசுக்கு தமிழக பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் விடுத்த அறிக்கையில், “கரூர் மாவட்டம் மருதூர் மற்றும் திருச்சி மாவட்டம் உமையாள்புரம் இடையே காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டுமென்பது டெல்டா விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கை. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் மருதூருக்கும் உமையாள்புரத்துக்கும் இடையே ரூ.750 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டது திமுக அரசு. ஆனால் எல்லா அறிவிப்புகளும் அறிவிப்புகளாகவே இருக்கும் இந்த அரசில் இந்த திட்டமும் விதிவிலக்கல்ல.