
தெருநாய்கள் பற்றி ஒளிபரப்பான நீயா நானா எபிசோட் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இதில் தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து பேசியவர்களில், ஒரு சிலர் கூறிய சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக திருநெல்வேலி வள்ளியூரை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர், நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தம்பிக்கு முறையான சிகிச்சையெடுத்தும் அவர் உயிரிழந்ததாக கூறியிருந்தார். என்ன நடந்தது என்பதைப் பற்றி அறிய சுயம்புலிங்கத்தை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர் கூறியதாவது, “25 வருசத்துக்கு முன்னாடி அந்த சம்பவம் நடந்துச்சு சார்…அப்ப எனக்கு 13 வயசு என் தம்பிக்கு 10 வயசு. பக்கத்து ஸ்கூல்லதான் படிச்சோம். அவன் நல்லா ஆக்டிவா துறுதுறுன்னு இருப்பான். சாயங்காலம் வீட்டுக்கிட்ட பசங்களோட விளையாடுறதுதான் எங்களோட பொழுதுபோக்கு. ஒரு நாள் அப்படி விளையாடிக்கிட்டு இருக்கும் போதுதான் ஒரு தெரு நாய் அவன கடிச்சிருச்சு. உடனே எங்க அப்பா, அம்மா அவனை ஆஸ்பத்திரிக்கும் கூட்டிட்டு போனாங்க.

நாய்க்கடிக்குன்னு போட வேண்டிய ஊசியெல்லாம் போட்டங்க. தொடர்ந்து மருத்துவர்கள் சொன்னா மாதிரி தவறாம ஊசி போட்டோம். கூடவே நாட்டு வைத்தியமும் பார்த்தோம். 75 நாள் வரைக்கும் எந்த பாதிப்புமே இல்ல. நல்லாதான் இருந்தான். திடீர்னு ஒரு நாள் ஸ்கூல் கிளம்பும் போது தலைவலிக்குதுன்னு படுத்தான். வாயில இருந்து கோழையா வடிஞ்சுது. எங்க அப்பா அம்மா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினாங்க.
தனியார் ஆஸ்பத்திரில உள்ளேயே சேர்க்கமாட்டோம்னு சொல்லிட்டாங்க. உடனேயே திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனோம். அங்கேயும் செக் பண்ணி பார்த்துட்டு, இனிமே முடியாது வீட்டுக்கே கூட்டிட்டு போங்கனு சொல்லிட்டாங்க. சின்னப் பசங்க யாரையும் கிட்ட விடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அவனோட சேர்த்து நாங்க மொத்தம் 5 பேரு. எங்க 4 பேரையும் தனியா வச்சுட்டு அவனை மட்டும் எங்க அம்மா, அப்பா கவனிச்சுக்கிட்டு இருந்தாங்க.

முதல் நாள் தலைவலின்னு படுத்தவன், அடுத்த நாள் மதியம் எங்களை விட்டு போயிட்டான். எங்க குடும்பத்துக்கே தாங்க முடியாத துயரம். துறுதுறுன்னு இருக்கக்கூடிய பையன், அவ்வளவு சின்ன வயசுல இறந்து போனதை ஏத்துக்கவே முடியல. அப்ப இருந்தே நாய்களை பார்த்தா ஒருவித பயமும் பதற்றமும் வந்துடும். நாய்ங்க அதிகமா இருந்தா அந்த தெருவை விட்டுட்டு சுத்தி வேற வழியா வீடு வந்து சேருவோம். என்னோட நடவடிக்கைகளை பார்த்து வளர்ந்த என் பசங்களும் நாய்ன்னா அதே பதற்றத்தோடதான் பார்க்குறாங்க. ஒவ்வொரு வருசமும் அவனோட நினைவு நாள் வரப்போ மனசுக்கு அவ்வளவு பாரமா இருக்கும்.’ என்கிறார் வேதனையுடன்.
இது பொதுப் பிரச்னை
தொடர்ந்து, நிகழ்ச்சியில் எதிர் தரப்பில் பேசியவர்களின் கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்? என்றேன். அதற்கு, ‘எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு நேர்ந்த இழப்பை அவர்கள் தனிமனித பிரச்னையாக பார்க்கிறார்கள். இது பொதுப் பிரச்னை, சமூகத்தின் பிரச்னை. இதை அந்த கோணத்தில் அவர்கள் அணுகவே இல்லை.

பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து அவர்கள் பேசவே இல்லை. நாங்களும் நாய்களே அடித்தே கொல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. இந்தப் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைத்தான் கேட்கிறோம்.’ என்கிறார் சுயம்புலிங்கம்.