
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.
இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பின்னர், இந்தக் கலவரம் திட்டமிட்ட சதி என்றும், அதைத் திட்டமிட்டது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட 9 பேர் என்றும் அவர்கள் அனைவரையும் அதே ஆண்டு செப்டம்பரில் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைதுசெய்தனர்.
அன்று முதல் அவர்கள் 9 பேரும் சுமார் ஐந்தாண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். வழக்கும் ஐந்தாண்டுகளாக விசாரணையில் மட்டுமே இருக்கிறது.
இதில், 9 பேரின் தரப்பிலிருந்தும் பலமுறை ஜாமீன் கோரப்பட்டும் அது நீதிமன்றத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், உமர் காலித் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் கோரிக்கை மேல்முறையீட்டு மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்தக் கலவரம் நன்கு திட்டமிடப்பட்ட சதி. நாட்டுக்கு எதிராக நீங்கள் ஏதாவது செய்தால், விடுவிக்கப்படும் வரை நீங்கள் சிறையில் இருப்பது நல்லது” என்று வாதிட்டார்.

மறுபக்கம், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர், தங்களிடமிருந்து குற்றப் பொருள்களோ அல்லது பணமோ மீட்கப்படவில்லை என்றும், போலீஸார் குற்றம்சாட்டியது போல் எந்த வகையான சதித்திட்டத்திலும் தாங்கள் பங்கேற்கவில்லை என்றும், தங்களின் பேச்சுக்கள் மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அமைதியின்மைக்கு வழிவகுக்கவில்லை என்றும் வாதத்தின்போது கூறினர்.
இருப்பினும், நீதிமன்ற அமர்வு 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
அதேசமயம், இந்த 9 பேர் சார்பில் மனு தாக்கல் செய்த சமூக ஆர்வலர்கள் தரப்பு வழக்கறிஞர், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.