• September 2, 2025
  • NewsEditor
  • 0

மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதியில் இருந்து 30 ஆயிரம் பேருடன் மும்பைக்கு வந்து கடந்த 29ம் தேதியில் இருந்து தென்மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டக்காரர்கள் தென்மும்பை முழுக்க ஆக்கிரமித்துள்ளதால் தென்மும்பையே ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்கள் மும்பை மாநகராட்சி சாலை, சி.எஸ்.டி. ரயில் நிலையம் உட்பட அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதோடு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். தென்மும்பையில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து முடங்கி இருக்கிறது.

போலீஸார் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் ஆசாத் மைதானத்தில் ஒரு நாள் மட்டுமே போராட்டம் நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்திருந்தனர். ஆனால் ஒரு நாளில் போராட்டத்தை விலக்கிக்கொள்ள மறுத்த மனோஜ் ஜராங்கே தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் சாலைகளில் சமையல் செய்து சாப்பிட்டனர். இதனால் தென்மும்பையில் உள்ள அதிகமான அலுவலங்கள் தற்காலிகமாக தங்களது அலுவலகங்களை மூடிவிட்டு வீட்டில் இருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டது.

தென்மும்பையில் உள்ள டாடா தலைமை அலுவலகம் மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களில் சிலர் மும்பை பங்குச்சந்தை கட்டிடத்திற்குள் கூட நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்றவர்கள் தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக்கு 1700 போலீஸார் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஆனால் அவர்களால் போராட்டக்காரர்களை எதுவும் செய்ய முடியவில்லை. தென்மும்பையில் உள்ள பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளது. சர்ச் கேட்டில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

ஆசாத் மைதானம் உட்பட பெரும்பாலான சாலைகளில் போராட்டக்காரர்களால் குப்பை குவிந்து கிடக்கிறது. நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் பணியில் நியமித்து இருக்கிறது. சாலைகளில் சிறுநீர் கழிப்பது போன்ற காரணங்களால் எங்கும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

ஆசாத் மைதானத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று கோர்ட் கூறி இருந்தது. ஆனால் அதனை தாண்டி 30 ஆயிரம் பேர் ஆசாத் மைதானத்திற்கு வந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் மாநில அரசு இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரேந்திரா,” போராட்டக்காரர்களை தொடர்ந்து அனுமதித்தால் லட்சக்கணக்கானோர் வரக்கூடும். போராட்டம் நடத்த கோர்ட் விதித்திருந்த நிபந்தனைகளை போராட்டக்காரர்கள் மீறிவிட்டனர். ஒரு நாள் மட்டும் போராட அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் அதனை மீறி இப்போது அனுமதி இல்லாமல் ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். காலவரையற்ற போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து சாலைகளில் உள்ள போராட்டக்காரர்கள் மற்றும் வாகனங்களை இன்று மாலை 4 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தெருக்களை சுத்தமாக வைத்திருக்க மனோஜ் ஜராங்கேயும், போராட்டக்காரர்களும் சாலைகளை மறித்து நிறுத்தி இருக்கும் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும். புதிய போராட்டக்காரர்கள் யாரையும் மாநில அரசு மும்பைக்குள் அனுமதிக்கக் கூடாது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி நடந்துகொண்டிருக்கும் போது மும்பை ஸ்தம்பிக்கக்கூடாது என்று நீதிபதி குகா தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் ஆசாத் மைதானதம் தவிர்த்து வேறு எங்கும் இருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோர்ட் உத்தரவை தொடர்ந்து போராட்டக்கார்கள் கோர்ட் உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று மனோஜ் ஜராங்கே கேட்டுக்கொண்டார். “போராட்டக்காரர்கள் தங்களது வாகனங்களை மைதானங்களில் நிறுத்திவிட்டு அங்கேயே உறங்கவேண்டும். மும்பை மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தவேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நேற்று மாலையே தங்களது வாகனங்களை பார்கிங் பகுதிக்கு மாற்ற ஆரம்பித்தனர். இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில்,” கோர்ட் உத்தரவை பின்பற்றுவோம்” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *