
புதுடெல்லி: செமிகான் இந்தியா மாநாட்டை டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் மிகச்சிறிய சிப் விரைவில் உலகின் மிகப் பெரிய மாற்றத்தை இயக்கும் என தெரிவித்தார்.
இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் செமிகான் இந்தியா 2025 மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8% ஆக பதிவாகி உள்ளது. மற்ற பொருளாதாரங்கள் நிச்சயமற்ற தன்மையுடன் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது.