
பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான கெளரவ இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆண் மற்றும் பெண் இடையே இருக்கும் பாரபட்சமான போக்கை நீக்கவும், இது தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கும் தவறான அபிப்பிராயத்தை அகற்றும் நடவடிக்கையில் கிருத்தி சனோன் ஈடுபடுவார்.
இது தொடர்பாக கிருத்தி சனோன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ”நான் முற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், என்னைச் சுற்றி நடக்கும் சமத்துவமின்மையைப் புறக்கணித்து விட முடியாது.
எனது பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களது பொறுப்புக்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்வர். நானும் எனது சகோதரியும் பெண் என்ற காரணத்திற்காகப் பாலினத்தால் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படவில்லை. அது போன்ற ஒரு சூழலை எனது பெற்றோர் உருவாக்கினார்கள்.
ஆனால் எனது தாயாருக்கு அப்படி இல்லை. பெண்களை அனுமதிக்காத பல விஷயங்களில் ஆண் குழந்தைகளை அனுமதித்த காலத்தில் என் அம்மா வளர்ந்தார். பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், சமைக்க வேண்டும், விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனது தாயார் நீச்சல் அல்லது நடனம் கற்றுக்கொள்ள விரும்பினார்.
ஆனால் முடியவில்லை. அவர் படிப்புக்காக மட்டுமே போராடினார். அதன் மூலம் அவர் ஒரு பேராசிரியரானார். எனது தாயாரின் போராட்டம்தான் எனக்கும், எனது சகோதரிக்கும் மாறுபட்ட எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள், என்ன கனவு காண்கிறீர்களோ அதனைச் செய்யுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கும்.
பாலிவுட்டில் பாரபட்சத்தைப் பார்க்க முடிந்தது. அதிகமான நேரங்களில் அதனைப் பார்க்க முடியாவிட்டாலும், நடிகர்களுக்கு நல்ல கார் மற்றும் நல்ல ஹோட்டல் என்ற போன்ற சிறிய பாரபட்சத்தைப் பார்க்க முடிகிறது. அது காரை பற்றியது கிடையாது. ஆனால் நான் பெண் என்பதால் என்னை அது போன்று நினைக்க வைத்தது.
எதையும் சமமாகச் செய்யுங்கள். எதாவது நிகழ்ச்சிக்குக்கூட நடிகைகளை முதலில் கூப்பிட்டுக் காத்திருக்க வைத்துவிட்டு நடிகருக்காகக் காத்திருப்பார்கள்.
இது குறித்து நான் அவர்களிடம் எதுவும் தெரிவித்தது கிடையாது. ஆனால் இவ்விவகாரத்தில் உங்களது மனநிலையை மாற்றிக்கொள்வது அவசியம். வீடுகள் முதல் பணியிடங்கள் வரை அன்றாட பணிகளிலிருந்து பாலின சமத்துவம் தொடங்குகிறது. அது சிறிய விஷயங்களில் கூட சமத்துவமாக இருக்கவேண்டும் என்பதில் தொடங்குகிறது” என்று தெரிவித்தார்.
நடிகை கிருத்தி சனோன் இந்தியில் நடிகர் தனுஷ் நடிக்கும் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…