
பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் சமரசம் பேசவந்த போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன? – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமர்பிரசாத் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அமர்பிரசாத் நேற்றிரவு காட்டுப்பள்ளியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பு பகுதியில், வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.