
பா.ஜ.க எம்.பியும், நடிகையுமான ஹேமாமாலினியின் மகள் இஷா தியோல் கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள இஸ்கான் கோயிலில் பரத் தக்தானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்துவிட்டனர். ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த இஷா தியோல், பரத்தை திருமணம் செய்த பிறகு நடிப்பைக் கைவிட்டுவிட்டார். ஆனால் ஒரு சில திரைப்படங்களைத் தயாரித்தார்.
இஷா தியோல் புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தனது குடும்ப வாழ்க்கை குறித்துப் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், “திருமணத்திற்குப் பிறகுத் தனது வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறின.
திருமணமாகி பரத் குடும்பத்தோடு வாழ ஆரம்பித்த பிறகு வீட்டில் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு நடமாட முடியவில்லை. நான் பரத்தைச் சந்திப்பதற்கு முன்பு ஒருபோதும் சமையல் செய்தது கிடையாது. ஆனால் பல பெண்கள் தங்களது கணவர்களுக்கு மதிய உணவு பாக்ஸ் எடுத்துச் செல்வதைப் பார்த்த போது மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்னுள் ஏற்பட்டது.
பரத் வீட்டுப்பெண்கள் சமையல் அறையின் ராணிகள் ஆவர். அவர்கள் தங்களது கணவர்களுக்காக சாப்பாட்டு டப்பாக்களை பார்சல் கட்டுவார்கள். ஆனால் எனது மாமியார் என்னிடம் சமையல் அறையில் வந்து வேலை செய்ய வேண்டும் என்று என்னை ஒருபோதும் நிர்ப்பந்தம் செய்தது கிடையாது. அதோடு ஒரு மருமகளாக நான் வீட்டு வேலையையும் செய்ய வேண்டும் என்று என்னிடம் கட்டாயப்படுத்தியது கிடையாது. ஆடை கட்டுப்பாடுகள் இருந்தாலும் என்னை மிகவும் அன்பாக நடத்தினார்கள்
பரத் வீட்டுப் பெண்கள் சிரமம் இன்றி என்னைச் சேர்த்துக்கொண்டார்கள். நான் பரத் வீட்டிற்கு முதல் மருமகள் என்பதால் எனக்கு யாராவது சாக்லேட், பழங்கள், கிரீம்களை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். எனது மாமியார் என்னைத் தனது மூன்றாவது மகனாக நடத்தினார்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
தனது கணவரைப் பிரிந்த பிறகு இஷா தியோல் அளித்திருந்த பேட்டியில், ”கணவன் மனைவி இடையே ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். குழந்தைகளுக்காக பெற்றோர் எப்போது குழுவாகச் செயல்படுவது அவசியம்.
உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் ஒன்றாக இருங்கள். அதில் பிளவு ஏற்படக்கூடாது. மற்ற அணிகள் உடைந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட அணிகள் உடையக்கூடாது. இது பலருக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்து பாருங்கள். முயற்சி செய்து கொண்டே இருங்கள். அந்த முயற்சியைக் கைவிடாதீர்கள்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இஷா தியோலிடம் இப்போது குழந்தைகள் வளர்கின்றன. அவரின் முன்னாள் கணவர் பரத் இப்போது புதிதாக காதல் வயப்பட்டு இருக்கிறார். அவர் மேக்னா லகானி என்ற பெண்ணைக் காதலிப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் லகானியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பரத் பகிர்ந்து தங்களது குடும்பத்திற்கு வருக என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேக்னாவும் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்பெயினில் பிறந்த மேக்னா இப்போது துபாயில் சொந்த தொழில் செய்து வருகிறார். லண்டனில் படித்து முடித்துவிட்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…